சூரனை வதம் செய்த முருகன், கோபம் தணிய திருத்தணி சென்றார். கோபம் தணிந்ததால் தணிகாசல மூர்த்தி என பெயர் பெற்றார். இப்பிறவியிலும், மறுபிறவியிலும் சுகம் பெற விரும்புவோர் தணிகைநாதனை விநாடிநேரம் நினைத்தால் போதும். அருள் கிடைத்து விடும். க்ஷணப்பொழுதில் (நொடியில்) அருளும் தலம் என்பதால் க்ஷணிகாசலம் என்றும் இதற்கு பெயருண்டு. மகனிடம் ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை உபதேசம் பெற்ற சிவன், அகத்தியரையும் உபதேசம் பெறும்படி கூற, அவரும் திருத்தணி சென்று தவம் செய்து முருகனைக் குருவாக அடைந்து உபதேசம் பெற்றார். இங்குள்ள நீலோற்பல சுனையில் இந்திரன் தவம் செய்து சங்கநிதி, பதுமநிதி என்னும் செல்வங்களைப் பெற்றான். இந்த சுனைக்கு செங்கழுநீர் ஓடை என்றும் பெயருண்டு. இந்த ஓடைநீர், அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.