Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருஉந்தியார் பகுதி-1
முதல் பக்கம் » திருஉந்தியார்
திருஉந்தியார் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

21 சொல்லும் பொருள்களும் சொல்லாதனவும் அங்கு
அல்லனாய் ஆனான் என்று உந்தீபற
அம்பிகை பாகன் என்று உந்தீபற.

சொல்லால் விளக்கத்தக்க , உள்ள பொருள்களாகவும் , சொல்லால் விளக்க இயலாத , இல்லாத பொருள்களாகவும், இவை இரண்டு தன்மைகளும் அல்லாத பொருள்களாகவும் சிவபெருமான் திகழ்கிறான். அவனுடைய தன்மை ஒப்பும் உவமையும் இல்லாத தனித்  தன்மை ஆகும். அவ்வாறு இருந்தும் உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவற்றுக்கு இரங்கிவந்து அருள்பாலிக்கிறான். ஏனெனில் அருளே வடிவான தனது சத்தியோடு நீக்கமின்றி நிற்கிறான் அப்பேரருளாளன்.

உலகப் பொருள்கள் யாவும் இன்னதெனச் சுட்டிச் சொல்லத் தக்கன. இல்லாத பொருள் என்பது சொல்லால் சுட்டவும் மனத்தால் நினைக்கவும் முடியாததாக இருக்கும் . பரம்பொருள் ஆகிய சிவ பெருமானே யாவையுமாய் அல்லனுமாய் விளங்குபவன் . உரைப்பதற்கும் உள்ளுவதற்கும் அரியவன் . மாணிக்கவாசகர் கூறுவது போல் அவன் வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் அது அவன் உயிர்களிடத்துக் கொண்ட பெருங்கருணையினாலேயே ஆகும்.

22.காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினுள்
ஆற்றுவது ஆற்றல் என்று உந்தீபற
அல்லாதது அல்ல என்று உந்தீபற.

யோக நிலையில் மூச்சுக் காற்றினை அடக்கி ஒருமுகப் படுத்தி உயிர்க்கு உயிராக விளங்குகின்ற இறைவனை மன ஒருமைப்பாட்டுடன் வழிபட்டு நிற்றல் வேண்டும். இதுவே ஆற்றல்களுக்கெல்லாம் தலைசிறந்த ஆற்றல் எனப்படும். ஏனெனில் புறப்பொருள்களை நோக்கி அலைபாயும் மனத்தை இறைவன்பால் செலுத்துவது இந்த ஆற்றலே. இதுவல்லாத பிற யாவும் ஆற்றல்கள் ஆகா.

யோக நிலையில் இடைகலை, பிங்கலை என்று இரண்டு நாடிகளின் வழியாக மூச்சுக் காற்று இயங்குகிறது என்று கொள்ளப்படும். இவ்வாறு மூச்சுக் காற்று இயங்குவது  ஒருவருடைய  கட்டுப்பாட்டில் அடங்காமல்  தானாக நிகழும். தானாக மூச்சுக்காற்று இயங்கும் போது மனமும் கட்டுப்பாடற்றுப் புறப்பொருள்களை நோக்கி அலைந்து தளரும். புலன்களை வெல்ல வல்லவர்கள் மூச்சைக் கட்டுப்படுத்தி அதன் பயனாக அலைபாயும் மனத்தையும் கட்டுப்படுத்த வல்லவர்கள் ஆகிறார்கள். இதனால் ஆற்றல்கள் யாவற்றினும் சிறந்த ஆற்றல் இது என்று கூறப் பட்டது. அல்லாதது எதுவும் ஆற்றல் ஆகாது.

மூன்றாவது அடியில்  அல்லாதது அல்லல் என்ற பாட வேறு பாடும் உண்டு. அவ்விடத்தில், இதுவல்லாத பிற ஆற்றல்கள் துன்பத் திற்கே காரணமாகும் என்ற பொருள்கொள்க.

23 கள்ளரோடு இல்லம் உடையார் கலந்திடில்
வெள்ள வெளியாம் என்று உந்தீபற
வீடும் எளிதாம் என்று உந்தீபற.

மலத்தினால் பிணிக்கப்பட்ட உயிர்களுக்கு இறைவன் காண்பதற்கு அறியவனாக மறைந்து நிற்பான் . உடம்பு என்னும் வீட்டில் குடியிருக்கும் உயிர்கள் இறைவனோடு கலந்துவிட்டால் அவ்வீட்டில் குவிந்து கிடக்கும் வினைச்சரக்கு , கொள்ளை போய்விடும். அதன் பின்னர் வரம்பற்ற பெரு வெளியிலே உயிர்கள் மகிழும். வீடுபேறும் எளிதில் கைகூடும்.

இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். அவன் இல்லாத இடம் உலகில் எதுவுமில்லை. ஆயினும் மலத்தால் பிணிக்கப்பட்ட உயிர்களுக்கு அவன் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை. எனவே அவன் கள்வன் எனப்படுகிறான். திருஞானசம்பந்த நாயனார் தமது முதல் திருப்பாடலிலேயே, இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்று கூறியருளினார். மனத்துக்குள்ளே எழுகின்ற சோதியாய் இருந்தும் எங்கும் நிறைந்திருந்தும் இறைவன் வெளிப்பட்டுத் தோன்றாமல் கரந்து நிற்கின்றான் என்பதை மாணிக்கவாசகர் கோயில் திருப்பதிகத்தில் நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால், ஆய் அவை அல்லையாய் ; ஆங்கே, கரந்ததோர் உருவே என்று அருளிச் செய்கிறார்.

வடமொழியில் சிவபெருமானை அருச்சனை செய்யும் போது தஸ்கரணாய நம; என்று அவனுடைய திருப்பெயர் கூறி வணங்குவது உண்டு. இதற்கு நேரான மொழிபெயர்பு கள்வனே உனக்கு வணக்கம் என்பது. இப்பாடலில் கள்ளர் என்ற சொல் இறைவனைக் குறித்து நின்றது.

மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே என்பது தொல்காப்பிய நூற்பா. இவ்வுலகில் உயிர் தனித்துத் தோன்றுவதில்லை. உடலில் இடங்கொண்டே உயிர் காணப்படும் என்னும் உண்மையை இந்த நூற்பா உணர்த்துகிறது . உடல் உயிருக்கு நிலையான இடமன்று. ஆயினும், வள்ளுவர் கூறுவது போல உயிர் உடம்பினுள் துச்சில் கொண்டு வாழ்கிறது. எனவே உடம்பு இல்லம் எனப்பட்டது . உடம்பில் ஒட்டுக் குடித்தனம் இருக்கும் உயிர் இல்லம் உடையார் எனப்பட்டது.

உடம்பாகிய வீட்டில் சேர்ந்துள்ள பண்டங்கள் வினையால் விளைந்த சரக்குகளே. சிவ பெருமான் தன் பெருங்கருணையினால் இந்த வினைச் சரக்கைக் கொள்ளை கொண்டு உயிர்களுக்கு வீடுபேறு அளிக்கத் திருஉள்ளம் பற்றுகிறான். உடலில் குடியிருக்கும் உயிர் இறைவனோடு கலந்துவிடும் போது வினைச்சரக்கு இறைவனால் நீக்கப்படுகிறது.

அவ்வாறு நீங்கியபின், இன்ப வெளியில் உயிர் மகிழ்ந்திருக்கும் நிலையைப் பெறுகிறது. உயிருக்கு வீடு பேறும் எளிதாகிறது.

24 எட்டுக் கொண்டார்தமைத் தொட்டுக் கொண்டே நின்றார்
விட்டார் உலகம் என்று உந்தீபற
வீடே வீடாகும் என்று உந்தீபற.

சிவபெருமானின் திருமேனியாக விண்ணும், காற்றும், தீயும் , நீரும் நிலமும், திங்களும், கதிரவனும், உயிரும் ஆகிய எட்டும் விளங்குகின்றன. யாவையுமாய் அல்லனுமாய் நிற்கின்ற இறைவனை இடைவிடாமல் பற்றி வழிபடுவோர்க்கு இந்த உலகத்துப் பொருட்களிடத்து நினைவு செல்லாது. அவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்திலேயே வீடு பேறு அடைந்தவர்களாக  விளங்குவார்கள்.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதை விளக்குவதற்காக அவனை அட்டமூர்த்தம் கொண்டவன் என்று குறிப்பது மரபு . ஐம் பூதமாயும் மதியும் கதிரும் ஆகியும் இயமானன் எனப்படும் உயிரும் ஆகியும் எண் வகை வடிவில் இறைவன் விளங்குகின்றான் . திருநாவுக்கரசு நாயனார் நின்ற திருத்தாண்டகத்துடள்.

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
    இயமானனாய் எறியும்  காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
    ஆகாசமாய் அட்ட மூர்த்தி ஆகி
பெருநலமும் குற்றமும்  பெண்ணும் ஆணும்
   பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
பெருநலையாய் இன்றாகி நாளை யாகி
   நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே.

என்று இறைவனின் அட்டமூர்த்தக் கோலத்தை விளக்கி அருளுகிறார். அட்டமூர்த்தம் என்பது, எட்டுக் கொண்டார் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது.

உலகத்தை விடுதலாவது யான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் அறுதலாகும். பற்றற்ற கண்ளே பிறப்பு அறுக்கும்  என்ற திருவள்ளுவர் திருவாக்குக்கு ஏற்ப அங்கேயே அப்போதே அதுவே வீடு ஆகும்.

25 சித்தமும் தீய கரணமும் சித்திலே
ஒத்ததே ஒத்தது என்று உந்தீபற
ஒவ்வாதது ஒவ்வாதது என்று உந்தீபற.

உயிரும் அந்தக் கரணங்களும் உலகியலை நோக்கி ஓடி அலையாமல் திருவருள் நெறியிலே அடங்கித் தன்னை இழந்து இருப்பதே முக்தி பெறுவதற்கு உரிய வழி. அவ்வாறின்றித் திருவருளிலிருந்து  பிறழ்ந்து செல்லுகின்றவர்கள் வீடுபேறு அடைவதற்குத் தகுதியற்றவர்கள்.

பசுகரணங்கள் எனப்படும் உயிர் அறிவு சிவகரணங்களாய்த் தம் முனைப்படங்கி ஒத்து நிற்றலே இருவினை ஒப்பு என்ற உயர்நிலைக்கு இட்டுச் செல்லும். இருவினையொப்புத் தோன்றினால் அல்லது இறைவன் திருவடியைக் கூடுகின்ற பக்குவம் உயிர்களுக்கு வாய்க்காது.

இக்கருத்து, திருவருட்பயனில்  நீடும் இருவினையும் நேராக நேர் ஆதல் , கூடும் இறைசத்தி கொளல் என்று விளக்கப்படுகிறது.

26 உள்ளும் புறம்பும் நினைப்பு அறின் உன்னுள்ளே
மொள்ளா அமுதாம் என்று உந்தீபற
முளையாது பந்தம் என்று உந்தீப்பற.

சிவ பரம்பொருள் உள்ளத்தின் உள்ளே உள்ளது என்றும், அது அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளது என்றும் அப்பொருளை நான் சிந்தித்து வழிபடுகிறேன் என்றும், அவன் என்னை ஆட்கொள்ளுகிறான் என்றும், இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட நினைப்புகள் தோன்றியும், மாறியும் வருமாறு இறைவனை வழிபடாமல் , தன்னை மறந்து அருள் வெள்ளத்தில் திளைப்பதே உண்மையான வழிபாடாகும். அப்படி வழிபடுபவர்களுக்கு பேரின்ப வெள்ளமாகிய அமுத ஊற்று எல்லையின்றிப் பெருக்கெடுக்கும். அதுமட்டிலுமன்று . வினையினால்  விளையும் கட்டும் முளையாது அழிந்து போகும்.

அகவழிபாடும் புறவழிப்பாடும் அற்ற பெருவழிபாட்டில் இன்பம் பிறக்கும் என்றும் பொருள் கொள்ளுவர்.

இந்த அகவழிபாட்டை நான் இயற்றுகிறேன் அல்லது புறவழி பாட்டை நான் இயற்றுகிறேன்  என்பன போன்ற நிலைகளில் தன் முனைப்புத் தலையெடுத்து வழிபாட்டின் பயனைப் பெறுதற்கு இடையூறாக நிற்கும். எல்லாமற என்னை  இழந்த நலம் ஒன்றே மொண்டு கொண்டாலும் குறையாத திருவருள் அமுத ஊற்றினை உயிர்களுக்கு வழங்கும். அதன் பின்னர் வினையின் முளையும் அழிந்துவிடும். கட்டும் இறும்

27அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு
அவிழும் இவ் அல்லல் என்று உந்தீபற
அன்றி அவிழாது என்று உந்தீபற

உயிரின் அறிவு யார் எனது என்னும் செருக்கினால் இறுகக் கட்டப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு, அப்பிணிப்புகள் நெகிழ்ந்த நிலையில் தான் பிறவித் துன்பங்கள் நீங்கும். அவ்வாறு இல்லாமல் தளை நெகிழாது நிற்பவர்க்குப் பிறவித் துன்பங்கள் நீங்கமாட்டா.

உயிரின் அறிவு எல்லைக்கு உட்பட்டது. அதுமட்டுமின்றித் தன்னை முன் நிறுத்தியே உயிரின் அறிவு தொழிற்படும். இப்பொருளால் அல்லது இச்செயலால் எனக்கு இன்பம் விளையுமா  அல்லது துன்பம் விளையுமா என்று நினைப்பதும் , நான் நினைக்கிறேன். நான் செய்கிறேன் என்று கருதுவதும் தனக்கென ஒருவகையாகவும், பிறருக்கென வேறு வகையாகவும் செயல்படுவதும் உயிரின் சிற்றறிவு.  இவ்வாறு செயல்படுவதால் உயிரின் கட்டுக்கள் அறுபடுவதில்லை . மாறாக கட்டுக்கள் இறுகு கின்றன.

தனக்கு ஒரு துன்பம் வரும் போது இது எனக்கு இவரால் நேர்ந்தது என்று கருதுவதும் அதன் வழியாகக் காமம், வெகுளி, மயக்கம் இவற்றின் பயன்கள் உயிர்களை மேலும் பிறவிப் பிணிக்குள் அமிழ்த்துவதும் நிகழ்கின்றன.

திருவருளின் வழி நின்று தன் முனைப்பு அற்றுப் போன உயிர்கள், பிணிப்பு அவிழ்ந்த நிலையில் அல்லல்களைவிட்டு நீங்கும் தகுதியைப் பெறுகின்றன.

தருமை ஆதீன குரு முதல்வர் சீர்வளர்சீர் குருஞானசம்பந்தர்,
அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவர்எவர்க்கு உதவினர் எவர் எவர்க்கு உதவிலர்
தவறவர் நினைவது தமை உணர்வதுவே
என்று அறிவுறுத்துவது இக்கருத்தினையே.

அவிழ் என்ற சொல் பக்குவம் என்ற பொருளையும் தரும். எனவே அவிழ இருக்கும் அறிவு என்பது பக்குவமடைந்த உயிர்களின்  அறிவு எனவும்  கொள்ளலாம்.

28 வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர்
பித்து ஏறினார்கள் என்று உந்தீபற
பெறுவது அங்கு என் பெணே உந்தீபற.

இறைவனின் திருவருளே முக்திக்கு வித்தாகும். அத்திரு வருளினை நாடிப்  பாசமுளையைக் கைவிட்டவர்களே பேரன்பினால் விளைந்த அருள்திறம் உடையவர்கள் ஆவார்கள். இதனை விடப் பெறுவதற்குரிய பேறு வேறு எதுவுமில்லை.

முத்திக்கு ஒரு வித்தே என்று இறைவன் அடியார்களால் புகழப் படுகிறான். அந்த வித்தினைத்  தேடி இப்பொழுது நம் கைவசப்பட்டிருக்ககின்ற பிறப்பு என்னும் முளையைக் கைவிடுதல் வேண்டும் . ஏனெனில் இது பாசமுளை. முளைதான் உள்ளதே வித்து எதற்கு என்று கருதுகிற உயிர்கள் , இப்பாச முளையினால் விளைவது இறப்பும் பிறப்புமாகிய அல்லல்களே என்று உணராதவர்கள். உணர்ந்தவர்கள் இந்த முளையைப் பேணி வளர்ப்பதினும் உயர்ந்தது முத்திக்குரிய வித்தினைத் தேடுவதே என்று இதனை விட்டொழிப்பார்கள்.

இறைவன் மீது ஆராத அன்பு பூண்டவர்கள் உலகவர் இயல்பிற்கு மாறாக நடப்பதனால் பித்தேறியவர்கள் போல் காட்சியளிப்பார்கள்.

 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் என என்னை ஆக்குவித்துப் பேராமே
சித்த மெனும்  திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேணே.

என்று மாணிக்கவாசகர் கூறுகின்ற உண்மை இங்கு நினையத்தக்கது. பித்தேறுதல் இங்கு இறைவன் மேல்கொண்ட பத்திமையின் சிறப்பைக் குறித்தது.

இளையான்குடிமாற நாயனார், அடியவராக வந்த இறைவனுக்கு அமுதூட்டும் பொருட்டுப் பகலில் வித்திய வித்தினைத்  தேடி எடுத்து பாசப் பழி முதல் பறித்த வரலாற்றை இப்பாடல் நினைவுறுத்துகிறது.

உந்திபறத்தல் மகளிர் விளையாட்டில் பாடப்படும் பாடல் என்பதை  என்பெணே  என்ற சொற்கள் குறிக்கின்றன. என்பெணே  என்ன பெண்ணே.

29சொல்லும் இடம் அன்று; சொல்லப் புகும் இடம்
எல்லை சிவனுக்கு என்று உந்தீபற
என்றால் நாம் என் செய்கோம் உந்தீபற.

இறைவனோடு உயிர் கூடுவதற்குரிய இடம் எது? எனக்கேட்பின் , அதனை வரையறுத்துச் சொல்ல இயலாது. ஞானாசிரியன் வழிகாட்டக் கண்டு அவன் உணர்த்துகின்ற நெறியில் உறைத்து நின்று, கைவரப் பெறுகிற ஞானமே சிவபரம் பொருளைக் கூடுமிடம். இவ்வாறு இருக்க இதற்கு மேற்கொண்டு எப்படி அவ்விடத்தைச் சொல்லால் விளக்க இயலும்?

சிவபெருமான் எங்கும் நிறைந்திருப்பவன், உள்ளும் புறமும் பரந்து நின்றும் உயிர்கள் அவனை உணருமாறு இல்லை . அத் தன்மையனாகிய இறைவனை எவ்விடத்துச் சென்று கூடுவது என்பது வினா? அவ்விடம் சொல்லுக்கு எட்டாதது. எங்கே சொல்லின் ஆற்றல் முடிகிறதோ அதுவே இறைவனைக் கூடுமிடம்.

ஞானாசிரியன் பரம்பொருளை உணர்த்தும் போது சொல்லால் உணர்த்துவதில்லை . ஞானாசிரியன் உணர்த்தினாலன்றி உயிர்க்ளும் பரம் பொருளைக் கூடுமிடத்தையும், நெறியையும் உணர்ந்து கொள்ள இயலா. இத்தகைய நிலையில் நாம் செயலற்று இருப்பதைத் தவிர வேறு எதுவும் இயலாது.

ஆலமர் செல்வனாகிய சிவபெருமானே தலைசிறந்த ஞானாசிரியர். அவனுக்கு மாணவர்களாக வாய்த்த முனிவர்கள் நால்வரும் நான்மறையும்  ஆறங்கமும் முற்றக் கற்றும், கேட்டும் தெளிந்தவர்கள். அவர்களுக்கு ஞானத்தை உணர்த்துவதற்கு இறைவன் சொல்லைப் பயன் படுத்தாமல் குறிப்பையே பயன்படுத்தினான் என்பதனை,

கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறை
    ஆறங்கமுடன் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த
    பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
    இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
   நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.  (திருவிளை14)

என்ற பாடல் நன்கு உணர்த்தும்.

30 வீட்டில் இருக்கில் என், நாட்டிலே போகில் என்
கூட்டில் வாள்சாத்தி நின்று உந்தீபற
கூடப்படாதது என்று உந்தீபற.

இல்லறத்தை மேற்கொண்டு மனையறம் காத்து வாழ்வதனாலும் துறவறத்தை மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மூர்த்தி , தலம், தீர்த்தம் என்று நாடெல்லாம் சுற்றினாலும் ஆவது ஒன்றுமில்லை. உயிராகிய கூட்டில் ஞான மெனும் வாளினைச் சாத்தி நின்று இறைவன் திருவருள் வயப்பட்டு ஓழுகுவதே சிறந்தது. அவ்வாறு நின்றாலன்றிச் சிவப்பேறு கைவருவதில்லை.

வீட்டில் இருப்பது என்பதை வீடுபேற்றுக்குரியதாகிய துறவற நெறியில்  ஒழுகுவது என்றும் , நாட்டிலே போகில் என்பதனை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் இல்லறநெறி என்றும் பழைய உரை கூறும்.

கூட்டில் வாள் சாத்துதல் என்பது தன்செயல் ஒழிந்து நிற்கிற நிலையைக் குறிக்கும் வீரன் ஒருவன் இடையில் உறையோடு கூடிய வாள் இருக்கும் போதும் அதனை எடுத்துப் பயன்படுத்தாமல் வருவதை எதிர்கொள்வானாயின் அது அவன் முனைப்பற்ற தன்மையைக் காட்டுவதாகும்.

திருவருள் வழியிலே சென்று தன்முனைப்பு அற்றவர்களுக்கு அல்லாமல் மற்றையோர்க்கு சிவப்பேறு கைகூடாது என்க.

இத்திருவுந்தியாருக்கு இணையான திருக்களிற்றுப்படியார்ப் பாடலில் தக்கன் இயற்றிய வேள்வி குறிப்பிடப்படுகிறது. தக்கன் தன் முனைப்போடு இயற்றிய வேள்வி அவனுக்கு நற்பயனைத் தாராது தீமையையே விளைவித்தது. ஏனெனில் அவனது தன்முனைப்பு அவனுக்கே தீங்காய் முடிந்தது.

தன்முயற்சியின்றி உறையில் இடப்பட்ட வாள் போல இருப்பவர்கள் இறைவன் திருவருள் வழிப்பட்டு ஒழுகுபவர் ஆவார்கள் மலையே வந்து வீழினும் அவர்கள் நிலைகலங்குவதில்லை.

எனவே தன்முனைப்பற்றவர்களுக்கு மட்டிலுமே இறைவன் திருவருள் கைகூடும் என்பதும் அல்லாதவர்களுக்குக் கைகூடாதென்பதும் இப்பாடலில் விளக்கப்பட்டன.

31சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற.

சைவ சமயம் ஒன்றே விளைந்த நெற்கதிர் போல விளங்குகிறது. மற்றையச் சமயங்கள் பதர்களைப் போல உள்ளன. உள்ளீடு அற்ற புறச்சமயங்கள் வீடு பேற்றைத் தராமல் வாழ்நாளை வீணாக்குவன. எனவே பிற சமயங்களில் புகுந்து உழல்வதை விட்டுவிடுக. பிற சமயங்கள் கூறும் கருத்துக்களையும் கேளாது இருப்பாயாக.

உலகத்தில் பல்வேறு வகைப்பட்ட சமயங்கள் வழக்கில் இருந்து வருகின்றன. இவற்றை ஆறு வகைப்படுத்திக் கூறுவதுண்டு. முதலில் வழங்கி வந்த வழக்கு சார்வாகம் , சாங்கியம் , வைசேடிகம், நியாயம், யோகம், மீமாம்சை என்பன. இதன் பின்னர் வழிபடு தெய்வத்தின் பெயரால் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்று ஆறாகச் சொல்லுவதுண்டு.

மாதவச் சிவஞான முனிவர், புறப்புறம் , புறம், அகப்புறம், அகம் என்று நால்வகையாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆறு சமயங்கள் உண்டு எனக் கூறி இந்த இருபத்துநான்கு சமயங்களுக்கும் அப்பாற்பட்டதாகச் சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கிறார்.

இந்த வகையான பகுப்புகள் எல்லாம் மரபு வழிப்பட்டவை. இன்றைய உலகில் இவற்றினும் மிகுதியாகப் பல்வேறு வகைப்பட்ட சமயங்கள் உள்ளன. அவற்றை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்வது என்பது இயலாது.

சமயத்தின் குறிக்கோள் வீடுபேற்றுக்கு வழிகாட்டுதல் ஆகும். சைவ சித்தாந்தம் ஒன்றே எடுத்த இப்பிறவியிலேயே வீடு பேற்றுக்கு வழிகாட்டும் தகைமை உடையது. ஆதலால் அதனைக் கதிர் முற்றிய நெல்களுக்கு ஒத்தாகக் கூறினார் ஆசிரியர்.

மற்றைச் சமயங்கள் உய்வுக்கு வழிநாட்டுவன போலத் தோற்ற மளித்தாலும் உண்மையில் அவ்வாறு வழிகாட்டும் தன்மை அற்றன ஆகையினாலே, வெளிப்பார்வைக்கு நெல்  போலத் தோற்றமளித்தும் உள்ளீடு இல்லாத சாவி போன்றன அவை என்று கூறினார்.

பிற சமயங்களில் புக்கு ஒழுகுவதனால் வீடுபேறு என்னும் குறிக்கோளை எட்ட இயலாமல் வாழ்நாள் வறிதே கழிவதனால் ஆவி அறாதே  என்றும் அவ்வுரை கேளாதே என்றும் ஆசிரியர் வலியுறுத்தினார்.

32 துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றது என்று உந்தீபற
துறந்தார் அவர்கள் என்று உந்தீபற.

உலகியல் உணர்வு அற்றுத் தன் உணர்வும் அற்று இறைவன் திருவருளையே நோக்கி நிற்கும் மெய் அடியாருக்கு நனவிலேயே மேலாகிய நிலை கைகூடும். இவர்களே உண்மையான துறவிகள்.

 உயிர்கள் உலகில் வாழும் காலத்து ஐந்து நிலையிலே நிற்கும் என்று சொல்லப்படும். அவை முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்று கூறப்படும். வடமொழியில் இவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்று வழங்கும் நனவு நிலையிலே தன்னைப் பற்றிய உணர்வும் உலகியல் பற்றிய உணர்வும் நிகழும். படிப்படியாக உயர்ந்து ஐந்தாவது நிலையில் உயிர்கள் ஒப்பற்ற பரம்பொருளுடன் கூடி உயிர்ப்படங்கி ஞானமே வடிவமாக நிற்கும்.

யான் எனது என்னும் செருக்கும் உலகப் பற்றுகளும் முற்றிலும்  அறுத்தொழித்த ஞானியர்கள் நம்மோடு வாழ்கிற காலத்தும் உலகியல் மாற்றங்களால் பற்றப்படாமல் இருந்தலால் அவர்கள் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் என்ற சிவஞான சித்தியார் கூறுகிறது. இவர்களே உண்மைத் துறவிகள்.

33 பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்றவரும் பரிசு உந்தீபற
முளையாது மாயை என்று உந்தீபற.

முன்பாடலில் கூறப்பட்ட ஞானிகள் சீவன் முத்தர் எனப்படுவர். அத்தகையவர்களுக்கு உலகியல் இன்பங்கள் எய்தினாலும் அவற்றை அவர்கள் பற்றறக் காண்பார்களே அல்லாமல் தோய்ந்து அனுபவிக்க மாட்டார்கள். ஆதலால் அவர்களுக்கு நேர்ந்த சிற்றின்பமே பேரின்பமாக விளைந்து முற்றும். மீளவும் பிறப்பதற்கான மல மாயை கன்மங்கள் முளை விடா.

இறைவன் திருவருளால் திருவாரூரில் பரவையாரை மணம் செய்து கொண்ட சுந்தர மூர்த்தி நாயனார் இல்லறத்தில் இருந்து மனை வாழ்க்கை மேற்கொண்டார். ஆயினும் அவர், பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்( தடுத்தாட்கொண்ட புராணம் 181) என்றே சேக்கிழார் கூறுகிறார். இதிலிருந்து சுந்தரர் உலகியல் இன்பங்களில் ஈடுபட்டாலும் அவற்றோடு ஒட்டாது நின்றார் என்பது தெளிவாகிறது.

34.பேரின்பம் ஆன பிரமக் கிழத்தியோடு
ஓரின்பத்து உள்ளான் என்று உந்தீபற
உன்னையே ஆண்டான் என்று உந்தீபற.

பேரின்பமே வடிவாகிய சிவசத்தியோடு நீக்கமின்றி நிற்கின்ற இறைவன் ஒப்பற்ற இன்ப வடிவாகவே உள்ளான். அவனே தானும் தன் தையலுமாய் எழுந்தருளி வந்து அடியார்களை ஆட்கொண்டு அருள் புரிவான்.

கிழத்தி என்பது உரிமை உடையவள் என்னும் பொருள் தரும். அம்மையும் அப்பனுமாக இறைவன் விளங்குகின்ற திருக்கோலம் உயிர்களுக்குப் பேரின்பம் விளைப்பதற்காக இறைவன் மேற்கொண்ட திருக்கோலமாகும். இத்திருக்கோலத்தோடு அடியவர்களின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக இன்ப வடிவான இறைவன் எழுந்தருளி ஆண்டு கொண்டு குறைவற்ற பேரானந்தத்தில் உயிர்களை ஆழ்த்துகின்றான்.

35 பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டார் என்று உந்தீபற
காணாதார் காணார் என்று உந்தீபற.

பேயால் பிடிக்கப்பட்ட பெண்டிர் போல உயிரைக் காணுதல் வேண்டும். அப்பெண்டிரைப் பிடித்த பேயினைப் போல இறைவனைக் காண வேண்டும். இவ்வாறு காண வல்லவர்களுக்கு இறைவனின் அருள் அனுபவம் வாய்க்கும் . இப்படிக் காண இயலாதவர்களுக்கு அருள் அனுபவம் வாய்க்காது.

முருகு மெய்ப்பட்ட புலத்தி போல  என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பேயால் படிக்கப்பட்ட பெண் , தான் ஒரு பெண் என்பதையே மறந்து விடுகிறாள். அவளுடைய சொல்லும் செயலும் பேயின் சொல்லும் செயலுமாகவே தோன்றும். அதுவரை இல்லாத வலிமையும் ஆவேசமும் பேய் பிடித்த பெண்ணுக்கு ஏற்பட்டு விடும்.  பெண் தன்மை மறைந்து பேய் என நிற்கின்ற தன்மையே காணப்படும்.

இறைவன் ஒருவரிடத்து ஆவேசித்த போது அவருடைய செயலை ஒழித்துத் தன் செயலே விளங்குமாறு நிற்பான். இந்த நிலையைக் கைகூடியவரே தற்போதத்தை இழந்து சிவ போதத்தில் நிலைபெற்றவர் ஆவர். இந்நிலை கைவரப்பெறாதவர் இறைவன் திருவருளை உணர மாட்டார்கள். ஆண்மக்கள் என்பது பன்மை ஆயினும் இறைவனைக் குறிக்கும் இவ்விடத்தில் அதனை ஒருமையாகவே கொண்டனர் பெரியோர்.

36 நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாம் என்று உந்தீபற
நாதற்குஇடம் அது என்று உந்தீபற.

நிலம் முதல் வான்வரை கூறப்பட்ட ஐம்பூதங்களிலே நான்காவது பூதம் காற்று ஆகும். உயிர்களுக்குப் பிராணவாயுவாக விளங்குவது இக்காற்றே. காற்றால் உந்தப்பட்டுத் தோன்றுவதே வாக்கு. இது முதலில் நுண்மையான சூக்குமை வாக்காகத் தோன்றிப் பின்னர் பைசந்தியாகவும், மத்திமையாகவும், வைகரியாகவும் மலரும் என்பர். அருளாசிரியரால் உணர்த்தப்பட்டு பிராணனும் நாதகலையும் ஒன்றிடும் போது, முத்தி நிலையில் நான்காவாதாகிய சாயுச்சியம் எய்தப் பெறும். அந்நிலையே சிவபெருமானாகிய நாதனுக்கு உரிய இடமுமாகும்.

யோக நிலையின் அடிப்படையிலே இந்தப் பாடல் அமைந்துள்ளது. எனவே இதனை வேறும் ஒரு வகையிலே பொருள் கொள்வர் நாலாவது என்று சொல்லப்படுவது நின்மலத் துரியம் என்னும் அருள்நிலை என்று கொள்வர். பிராணவாயு சுழுமுனை வழியே நாதகலையுடன் கூடி உச்சியில் சென்று சேர்வதே அருள்நிலை என்று கொள்வர்.

37 சென்ற நெறியெல்லாம் செந்நெறி ஆம்படி
நின்ற பரிசு அறிந்து உந்தீபற
நீ செயல் செய்யாதே உந்தீபற.

இறைவனின் திருவருள் செலுத்தும் வழியிலே செல்லுகின்ற ஒருவனுக்கு, அவன் சென்ற நெறியெல்லாம் செம்மையான நெறியேயாம் இந்தத் தன்மையை அறிந்து அதன் வழியிலே நிற்க. தன் முனைப்போடு செய்யப்படுகின்ற செயல்கள் யாவும் நல்வினைக்கும் தீவினைக்கும் இட்டுச் சென்று மீண்டும் இறப்பு பிறப்புகட்கு உட்படுத்தும். ஆதலால் நீயாக எச்செயலையும் செய்யாதே

வாழ்கிற காலத்தில் செய்யப்படும் செயல்கள் யாவும் யான் எனது என்னும் முனைப்போடு இயற்றப்படுமானால் விருப்பும் வெறுப்பும் தலைதூக்கும். அவ்விருப்பு வெறுப்புக்கள்  நேரிய பாதையிலிருந்து வழுவச் செய்யும் . எவ்வளவுதான் செம்மை நெறியிலே நிற்பதாகக் கருதினாலும் செருக்கினால் விளைவது உயிர்க்கு நலம் பயவாது.

இதற்கு மாறாக இறைவன் திருவருளை முன்னிட்டு கொண்டு தனக்கென விருப்பும் வெறுப்பும் இல்லாமல், எல்லாம் சிவன் செயல் என்று ஒழுகுவார்க்கு அவர் சென்ற நெறியே செம்மையான நெறியாகும். இறைவன் அருளைப் பற்றி நிற்பது இத்தகைய பயனைத்தரும் என்பதை மாணிக்கவாசகப் பெருமான் சித்தம் சிவமாக் செய்தனவே தவமாக்கும் அத்தன் எனக்கு அருளியவாறு யார் பெறுவார் அச்சொவே  என்று கூறியதிலிருந்து அறியலாம்.

நெறி என்பதைச் சமய ஒழுக்கம் என்று பொருள்கொண்டு பல்வேறு சமயங்களும் புடி முறையாக உயிர்களை இட்டுச் சென்று இறுதியில் இறைவன் திருவடியிலே கொண்டு சேர்க்கும் என்றும் பொருள் கொள்வதுண்டு. இது அப்பர் பெருமான் திருவாக்கில் ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன, தேறிய தொண்டைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன. இன்னம்பரான் தன் இணையடியே  என்று உணர்த்தப்படுகிறது.

38 பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது என் ?
அக்கொழு நீ அறிந்து உந்தீபற
அறிந்து அறியா வண்ணம் உந்தீபற.

பொன்னால் ஆகிய கொழுவினைக் கலம்பையில் பூட்டி வரகுவிதைப்பதற்காக யாராவது உழுவார்களா? அப்படி உழுவதனால் என்ன பயன்? ஞான ஆசிரியனால் வழங்கப்பெற்ற திருவருள் இன்பத்தில் தோய்ந்து கிடவாமல் மேலும் மேலும் உலகியலிலே உழன்று துன்பத்தையே தேடிக்கொள்ளுதல் முறையன்று . நீ பெற்ற  திருவருள் பொற்கொழுப் போன்றது. அதனை அறிந்து வேறு செயல் அறியாது நிற்றல் வேண்டும்.

கொழு என்பது கலப்பையின் நுனியில் மாட்ட பெற்று நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தப்பெறும் கருவி. இங்கு அது ஆசிரியனால் வழங்கப் பெற்ற திருவருளின் சிறப்பைக் குறித்தது. வரகு புன்செய்ப் பயிர். வன்னிலமாகிய புன்செய் நிலம் நீர் பாய்ச்சிப் பண்படுத்தப் படாமல் காய்ந்து கிடக்கும் போதே உழவு செய்யப்படும். அதன் பின்னர் புன்செயப் பயிர்கள் விதைக்கப்படும். உரியகாலத்தில் மழை பெய்தால் புன்செய்ப் பயிர் விளையும். மழை தப்பினால் பயிர் விளையாதது மட்டுமல்ல வித்திய விதையும் பயன்தராது கெட்டுப்போகும் உழுவதற்குப் எடுத்துக் கொண்ட முயற்சி வீணாகும். உயர்ந்த பொன்னாலாகிய கொழு அதன் பெருமை  அறியாத உழவனால் வலிய நிலத்தை உழுவதற்குப் பயன் படுத்தப்படுவது போல, ஞான ஆசிரியனால் திருவருள் கைவரப்பெற்றும் அதன் சீர்மை உலகியல் ஆர்வத்தால் குன்றிப்போகும் என்று ஆசிரியர் உணர்த்துகிறார்.

வரகு சிறப்பற்ற புன்செய்ப் பயிர். இவ்வளவு மலிந்த ஒன்றை நாடி, அதற்கான வீண் முயற்சிகளில் ஈடுபட்டு, விலைமதிப்பற்ற திருவருள் ஞானத்தை வீணடித்து விடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

39 அது இது என்னாது அனைத்து அறிவாகும்
அது இது என்று அறிந்து உந்தீபற
அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற.

பொருள்களைச் சுட்டி அறியும் தன்மை உடையது உயிர். உயிர் சிற்றறிவுடையது. எனவே ஒரு நேரத்தில் ஒரு பொருளையன்றி இன்னொன்றை அறியும் திறன் அதற்கு இல்லை. இதனை ஏகதேச அறிவு என்பர். இறைவனின் அறிவு முற்றறிவு. ஆகையால் இறைவன் ஒவ்வொரு பொருளாய்ச் சுட்டி அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரு சேர உணர்கிறான். தன் அளவற்ற கருணையினாலே உயிர்களோடு பொருந்தி நின்று, அவற்றுக்கு உடனாய் நின்று உதவுகிறான். பொருந்தி நின்று அவற்றுக்கு உடனாய் நின்று உதவுகிறான். அப்பெருமான் விரிந்த சடையுடைய சிவபெருமானே என்பதனை அறிக.

 முதலில் கூறப்படும் அது இது என்ற சொற்கள் உலகத்தில் உள்ள பொருள்களை உயிர் ஒன்று ஒன்றாகப் பார்க்கும் நிலையை உணர்த்து கின்றன. சேய்மையில் உள்ள பொருளை அது என்றும் அண்மையில் உள்ள பொருளை இது என்றும் தனித்தனியாகப் பார்க்கும் இயல்புடைய உயிர்களின் சிற்றறிவை இவ்விரண்டு சொற்களும் உணர்த்துகின்றன.

அனைத்தறிவாகும் அது இது  என்றது முற்றறிவுடைய இறைவனே உயிர்களோடு ஒன்றாய்க் கலந்து நின்று அவற்றுக்கு உற்ற துணையாக இருக்கிறான் என்பதை உணர்த்துகிது.

உள்ளத்தில் உள்ளே உறைபவனாகிய  இறைவன், உயிர்களின் அறிவை விளக்கிக் சேய்மையில் இல்லாமல் அவற்றோடே நிற்கின்றான் என்பது கருத்து . சுத்த அறிவே சிவம் என்னும் சுருதிகள் கேளீரோ, பல பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ என்று கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளதும்.  பிரக்ஞானம் பிரம்மம் என்ற மகா வாக்கியமும் இங்குக் கருதத்தக்கன.

இறைவனுடைய திருச்சடை அவனுடைய திருக்கூத்தின் போது அண்டமுகடுகளை யெல்லாம் தொடும் என்பது நினைவுறுத்தப்பட்டது. 

40 அவன் இவன் ஆனது அவனருளால் அல்லது
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற
 என்றும் இவனே என்று உந்தீபற.

சொல்லுக்கும், மனத்துக்கும் எட்டாத சிவபெருமான் தன் எளிவந்த தன்மையினாலே இரங்கி உயிர்களுக்கு அருள் பாலிக்கிறான். உயிர்களோடு ஒன்றாயும், உடனாயும் வேறாயும் நிற்கின்ற அப்பெருமான் உயிர் பக்குவப்பட்ட காலத்து அதனைச் சிவமேயாக்கி ஆட்கொள்ளுகிறான். இறைவன் எப்போதும் இறைவனே. ஆகையால் கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் உயிர் சிவனது அடிமையே

அவன் என்ற சொல் இறைவனைக் குறித்து நின்றது. இவன் என்ற சொல் உயிரைக் குறித்தது. முத்தி நிலையில் உயிர் சிவபெருமான் திருவடியின் கீழ், சிவமேயாய் விளங்கும் என்பர். மாணிக்கவாசகப் பெருமான் தம்முடைய அச்சோப் பதிகத்தில்

 முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே

என்று அருளியுள்ளார். இதனைக் கொண்டு மாணிக்கவாசகர் ஏகான்மவாதி என்று கூறுவார்களும் உளர். ஆனால் சிவமாக்கி என்ற சொற்களை மட்டுமே அவர்கள் கொள்ளுவோர் ஆகி எனை ஆண்ட என்ற சொற்களை விட்டு விடுகின்றனர். உயிர் அடிமையாகவும் இறைவன் ஆண்டானாகவுமே என்றும் இருக்கும் சேர்வார் தாமே தானாகச் செய்யுமவன் உறைவிடம் என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கு இங்கு நினையத்தக்கது. சைவசித்தாந்தத்தில் அத்துவிதக் கருத்தை இப்பாடல் வரையறை செய்து உணர்த்துகிறது.

41 முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீபற
அப்பழம் உண்ணாதே உந்தீபற.

முத்திக்கு உரிமை உடையது உயிர். அவ்வுயிரினைப் படி நிலையிலே உயர்வித்துப் பக்குவப்படுத்தி உரிய காலத்தில் இறைவன் அதற்கு வீடு பேற்றை வழங்குவான். ஆணவமலத்தினாலே உயிர் மூடப்பட்டிருந்ததால் இறைவன் உயிருக்கு உடலை வழங்கினான். இவ்வுடல் அத்திப் பழம் போன்றது. அத்திப் பழத்துக்கு ஆசை வைத்து முத்திக்கனியை இழந்து விடக்கூடாது. எனவே, இந்த அத்திப் பழத்தை உண்ணாது தவிர்த்தல் வேண்டும்.

உலகத்தில் காணப்படும் சடப்பொருள்களுக்கு முத்திபெறும் உரிமை இல்லை . உயிர் ஒன்றனுக்கே முத்திநிலை அடையும் உரிமை உண்டு. எனவே அது முத்தி முதல் எனப்பட்டது. ஆணவமலத்தின் காரியங்களாக மாதவச் சிவஞான முனிவர் மோகம், மதம் ,அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என்ற ஏழு விளைவுகளை எடுத்துரைக்கிறார். இவை யாவும் மோகத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றுவன. ஆதலின் மோகக் கொடி படர்ந்து என்று உரைத்தார்.

மாயையின் காரியமாக அமைந்த உடலை அத்தி பழுத்தது என்ற சொற்களின் மூலம் விளக்கினார். உலகியல் வழக்கில் அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை என்ற பழமொழியை இது நினைவுறுத்துகிறது. உலகியல் நுகர்வுகளை விரும்பி முத்தி என்னும் கற்பகக் கனியை இழந்து விடக் கூடாது. எனவே உடல்மீதும் உலகியல் பொருள்கள் மீதும் உவர்ப்புத் தோன்ற வேண்டும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

42 அண்டம் முதலாம் அனைத்தையும் உட்கொண்டு
கொண்ட அத்தைக் கொள்ளாதே உந்தீபற
குறைவு அற்ற செல்வம் என்று உந்தீபற.

இப்பேரண்டம் முதலாக எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி வைப்பது மாயை மாயையினைப் பற்றி நில்லாமல், அதற்கும் அப்பாற் பட்டவனாகிய சிவபெருமானையே பற்றி நிற்றல் வேண்டும். அதுவே குறைவற்ற செல்வமாகிய முத்திப் பயனைத்தரும்.

சுட்டி அறியப்படுவதாகிய இவ்வுலகனைத்தும் மாயையின் காரியங்களே. ஆதலால் அவை யாவும் தோன்றி, நின்று அழிவனவே. நில்லாதவற்றை நிலையுடையன என்று கருதும் புல்லறிவினைக் கைவிட்டுக் குறைவிலா நிறைவாகிய இறைவனிடம் ஈடுபடுதல் வேண்டும். அது ஒன்றே குறைவற்ற செல்வமாகும். திருஞானசம்பந்தர் திருவாக்கில்  செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே  என்ற கருத்து இவ்வாறு விளக்கப்பட்டது.

43 காயத்துள் மெய்ஞ்ஞானக்கள் உண்ணமாட்டாதே
மாயக்கள் உண்டார் என்று உந்தீபற
வறட்டுப் பசுக்கள் என்று உந்தீபற.

உள்ளும் புறம்பும் நிறைந்து நின்று, மனத்தகத்தும், தலைமேலும், வாக்கினுள்ளும் கலந்துநிற்பவன் இறைவன் . அவன் திருவடிகளைப் பற்றி, அதன் பயனாக ஊற்றெடுக்கும் சிவஞானத் தேனை உண்ணமாட்டாமல் உடம்பால் வரும் சிற்றகன்பமாகிய கள்ளினை உண்டு மயங்கும் உயிர்கள் பால் வற்றிப் போன வறட்டுப் பசுக்களைப் போலப் பயனற்றவர்கள் ஆவார்கள்.

மெய்ஞ்ஞானக்கள் என்பது இறைவனது திருவருளாகிய தேன் என்ற பொருள் தரும். மாயக்கள் என்பது மயக்கத்தைத் தருகிற உலகியல் சார்ந்த சிற்றின்பமாகிய கள் என்று பொருள்தரும்.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
 அனைத்தெலும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியுங்
குனிப்புடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
என்ற மாணிக்கவாசகர் திருவாக்கும் இதனை வலியுறுத்தும். பயனற்ற உயிர்களை வறட்டுப் பசுக்கள் என்றார். பசு என்ற சொல் ஆன்மாவை உணர்த்துகின்றது.

44 சிந்தையின் உள்ளும் என் சென்னியினும் சேர
வந்தவர் வாழ்க என்று உந்தீபற
மடவாள் உடனே என்று உந்தீபற.

என் சிந்தையில் நிறைந்தும் என் தலையில் தன் மலரடிகளைச் சூட்டியும் என்னை ஆட் கொள்ளுவதற்காகத் தனது திருவருள் ஆகிய சிவசத்தியோடு எழுந்தருளிய எம்பொருமான் என்றென்றும் வாழ்க.

என்னை இப்பவத்தில் சேரா வகை எடுத்து
என் சித்தத்தே தன்னை வைத்து அருளினாலே
தாளிணை தலை மேல்சூட்டும் என்ற சிவஞான சித்தியார்ப் பகுதி இங்கே நினையத் தக்கது. சிந்தையின் உள்ளும் என் சென்னியிலும் என்பது உள்ளும் புறம்புமாய் இறைவன் திருவருள் பாலித்தமையை விளக்கும். உமையொருபாகனாய் விளங்குபவன் ஈசன் என்பதனால்  அத்தொன்மைக் கோலத்தை நினைத்து மடவாளுடனே என்றார். இறைவனை வாழ்த்துவதும் தாம் வாழ்வதற்காக என்ற திருவாசகப் பகுதி மனம் கொள்ளத்தக்கது.

45 வையம் முழுதும் மலக்கயம் கண்டிடும்
உய்யவந்தான் உரை உந்தீபற
உண்மை உணர்ந்தார் என்று உந்தீபற.

உய்யவந்த தேவ நாயனார் அருளிச் செய்த இந்நூல் உலக மக்களைப் பாசக்கடலிலிருந்து மீட்டு, இறைவனின் திருவடிப் பேறாகிய அக்கரைக்கே ஏற வாங்கும் தோணியாகும். இந்நூலை நல்லாசிரியர் வாயிலாக உணர்ந்தவர்கள் மெய்பொருளை உணர்ந்தவர்கள் ஆவார்கள்.

சுயம் என்ற சொல் ஆழமான நீர் நிலையை உணர்த்தும். இங்கே அது பிறவிப் பெருங்கடலை உணர்த்திற்று. இப்பிறவிக் கடல், மலத்தினால் விளைவது ஆதலின் மலக்கயம் என்றார். கண்டிடுதல் கடலில் வீழாது கரை ஏறுதல் என்ற பொருளைத் தந்தது. வையம் உலகத்தைக் குறிக்காது உலகத்தில் வாழும் உயிர்களைக் குறித்தது. கயம் என்பது க்ஷயம் என்ற சொல்லின் தமிழ் வடிவமாகக் கொண்டும் பொருள் காண்பர். நூலின் பயன் கூறும் பாடலாக இந்த இறுதிப் பாடல் அமைந்துள்ளது.


நன்றி: சி.சு.மணி

 
மேலும் திருஉந்தியார் »
சைவ சித்தாந்தத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு. இவற்றுள் மணிமுடியாய் விளங்குவது மெய்கண்ட தேவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar