பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: சுப்புராய முதலியார் நகராட்சி பள்ளி வளாகத்தில், பாழடைந்துள்ள உற்சவ மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சியில், சுப்புராய முதலியார் நகராட்சி பள்ளி அமைந்துள்ளது. இதில், 520 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், பழமையான மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், ஆண்டுதோறும், வைகாசி மாதம் குமரக்கோட்டம் முருகன் கோவில் பிரம்மோற்சவத்தில், தவன உற்சவத்தின் போது, இந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் உற்சவம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, இம்மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் உற்சவம் நிறுத்தப்பட்டு, குமரக்கோட்டம் கோவிலிலேயே நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இம்மண்டபம் பராமரிப்பு இன்றி சீரழிந்து காணப்படுகிறது. மண்டபத்தில், மரங்கள் முளைத்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இம்மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.