ஏரல்:குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில்புகழ்பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இந்தாண்டு ஆனி பெருந்திருவிழா நேற்று நடந்தது. விழாவில் நேற்று காலை கிளாரினெட் இன்னிசை ,கூட்டு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பக்திசொற்பொழிவு, மங்கள இசை, சிறப்புநாதஸ்வர கச்சேரி நடந்தது. மதியம் சிறப்புபூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சியும், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்ரீ நாராயணசுவாமி திருவீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவினை முன்னிட்டு குரங்கணி ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து வரும் 23ம் தேதி 8ம் நாள் கொடை விழா நடக்கிறது. அன்று காலை நாதஸ்வர இன்னிசை, கூட்டுவழிபாடு, சமய சொற்பொழிவு, மாலையில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் சிறப்பு விளக்கு பூஜையும் இரவு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. விழா நாட்களில் முத்துமாலை அம்மன் தங்கமுக விசேஷ அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.