ஆதிசங்கரர் காஷ்மீர தேசத்திற்கு யாத்திரை சென்றிருந்தார். லலிதா சகஸ்ர நாமத்திற்கு உரை எழுதும் விருப்பத்தால், சீடரிடம் அந்நூலைக் கொண்டு வரக் கட்டளையிட்டார். புஸ்தக பண்டாரத்திற்கு (நூல்நிலையம்) சென்ற சீடர், சுவடியை கொண்டு வந்து கொடுத்தார். அது விஷ்ணு சகஸ்ர நாமமாக இருந்தது. மீண்டும் அனுப்பிய போதும், இதே நிலை தான். நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? என்று சீடனைக் கடிந்து கொண்டார். சீடர், சுவாமி! நான் சென்ற போது, சிறுபெண் ஒருத்தி வந்தாள். லலிதா சகஸ்ர நாமத்தை வைத்து விட்டு, விஷ்ணு சகஸ்ர நாமத்தை எடுத்துச் செல்!, என்றாள். அதனால் தான் தவறு நேர்ந்ததாகச் சொன்னார். இதைக் கேட்ட சங்கரர் லலிதாம்பிகையே பாலையாக(சிறுமி) வந்து விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு உரை எழுத தனக்கு உத்தரவிட்டதைப் புரிந்து கொண்டார். அந்த சிறுமி வடிவ அம்பாளே பாலாம்பிகா எனப்படுகிறாள்.