பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 29ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை நடக்கும், ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, மலைக்கோவிலில் உள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றானது, ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா. ஆடி கிருத்திகை விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்வர். இந்த ஐந்து நாட்களிலும், மலைக்கோவில் மற்றும் சரணவப்பொய்கை ஆகிய இடங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, முருகப் பெருமானை வழிப்படுவர். இந்தாண்டிற்கான ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வரும், 29ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி கோவில் நிர்வாகம், மலைக்கோவில் வளாகம் முழுவதும் உள்ள சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு முடிவு செய்தது. தொடர்ந்து, நான்கு நாட்களாக மலைக்கோவில் வளாகம் முழுவதும், ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.