இலங்கையிலுள்ள பழமையான முருகன் தலம் கதிர்காமம். கதிர் என்றால் ஒளி. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக வந்ததால் முருகனுக்கு கதிர்வேலன் என்று பெயர். ஒளியாக விளங்கும் அப்பெருமான் நம் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றும் தலம் என்பதால் இத்தலம் கதிர்காமம் எனப்படுகிறது. கதிரமலை, கதிர்காமன், கதிரேசன் என்ற பெயர்களை இலங்கைத் தமிழர்கள் விருப்பமாக வைத்துக் கொள்வர். 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய கொள்ளைக் கும்பல் கதிர்காமம் வந்தது. அவர்களில் ரிபெய்ரோ என்பவன் எழுதிய குறிப்பில், கதிர்காம முருகனின் மகிமை பேசப்படுகிறது. நாங்கள் ஐந்துபேரும் ஒவ்வொருவராக கதிர்காமம் கோயிலுக்கு கொள்ளையடிக்க வரிசையாக அனுப்பப்பட்டோம். செல்லும் வழியில் பைத்தியம் போல புத்தி தடுமாற்றம் அடைந்து உளறத் தொடங்கினோம். திருடவேண்டும் என்ற எண்ணம் கடைசி வரை கைகூடவில்லை, என அவர் குறிப்பிடுகிறார்.