பதிவு செய்த நாள்
26
ஜூலை
2013
10:07
லத்தூர்: மாளச்சேரி ஊமை செல்லியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடந்தது. லத்தூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாளச்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஊமை செல்லியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடித்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, நேற்று நடைபெற்றது. காலை, அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 11:30 மணிக்கு, ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மதியம் 1:30 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். முன்னதாக, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கரகம் வீதி உலாவும் நடை பெற்றது.