பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
சென்னை : ஆண்டு தோறும், ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தை, 20 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறுபான்மையினர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படும் மானியத் தொகையின் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். இதன் அடிப்படையில், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தேனி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய, 10 மாவட்டங்களுக்கு, 48.68 லட்சம் ரூபாய் இணை மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து, ஹஜ் யாத்திரைக்கு உதவும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இக்குழுவிற்காக தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஹஜ் குழுவிற்கு, வழங்கப்படும் மானியத்தை, 20 லட்சத்தில் இருந்து, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் தற்போது உத்தரவிட்டு உள்ளார்.