பதிவு செய்த நாள்
16
ஆக
2013
04:08
தேனான வாழ்வுதரும் தீந்தமிழ்த் துதிகளுள் முன்னதாக இருப்பது தேவாரம். சமயக் குரவர் நால்வருள், திருஞானசம்பந்தன், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திசுவாமிகள் ஆகிய மூவர் எழுதிய இத் தேவாரப் பாடல்கள், மொத்தம் 8262 ஆகும். இப்பாடல் தொகுதியை அடங்கன் முறை என்பர். தேவாரப் பாடல்கள் அனைத்தையும் தினமும் ஓதுகின்றவர்கள் வீடுபேறு பெற்று சிவனடியைச் சேர்வார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. சிவாலய முனிவர் என்பவர் தினமும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்யும் பயிற்சியை மேற்கொண்டார். பல காலம் கடுமையாக பயிற்சி செய்தும், ஒரேநாளில் அனைத்துப் பாடல்களையும் பாராயணம் செய்து முடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் கவலை அடைந்த சிவாலய முனிவர், சிதம்பரம் நடராசப் பெருமான் முன் நின்று தனது இயலாமையைச் சொல்லி வேதனைப்பட்டார்.
மனம் இரங்கிய மகாதேவர், பொதிகைமலை சென்று அகத்திய முனிவரைக் கண்டால், உன் விருப்பம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கால் உணர்த்தினார். பொதிகை மலை சென்றடைந்த முனிவர், மூன்று ஆண்டுகள் அகத்திய முனிவரை நினைத்து கடும் தவம் புரிந்தார். உரிய காலத்தில் அவருக்குக் காட்சியளித்த அகத்தியர், மூவர் அருளிய அடங்கன் முறை தேவாரப் பாடல்கள் அனைத்தையும் போதித்தார். பின்னர், தினமும் பாராயணம் செய்வதற்கு ஏதுவாக அடங்கன்முறை தேவாரப் பதிகங்களிலிருந்து 263 பாடல்களைத் தேர்வு செய்து ஒரு நூலாக தொகுத்தருளினார். அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி எடுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்று பெயர் வந்தது. அகத்தியர் தேவாரத் திரட்டினை தினமும் சொல்வோர்க்குத் தீவினை இல்லாத தேனான வாழ்வும் நிறைவில் இறைவன் திருவடி நிழலும் கிட்டும் என்பது நிச்சயம்!