சிவபெருமானுக்கு இயற்கையாக அமைந்த திருவடிவங்கள் எட்டில் சூரியனும் ஒருவர் என்கின்றன ஆன்மிக நூல்கள். சிவாலயங்களிலும் ஆத்மார்த்த சிவ பூஜைகளிலும் சூரியனுக்கு முக்கியத்துவம் உண்டு. சூரிய தேவனுக்கும் சிவ பூஜை செய்வதில் மிகுந்த விருப்பம் உண்டு. பல்வேறு தலங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து அவர் வழிபட்டதை, புராணங்கள் விவரிக்கின்றன.
சில தலங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் சூரியக் கதிர்கள், பலிபீடம் தாண்டி வந்து கருவறையில் இருக்கும் சிவலிங்க மூர்த்தத்தின் மீது படிகின்றன. பாஸ்கரனாகிய சூரிய தேவனால் இப்படி வழிபடப்படும் தலங்களை பாஸ்கர ÷க்ஷத்திரங்கள், பாஸ்கரபுரி என்றெல்லாம் சிறப்பிப்பார்கள்! பாடல் பெற்ற சிவத்தலங்களான திருக்கண்டியூரில் மாசி மாதம் 14,15 தேதிகளிலும், திருவேதிக்குடி தலத்தில் பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளிலும் , புறவார் பனங்காட்டூர் எனும் தலத்தில் சித்திரை முதல் வாரத்திலும் சூரியக் கதிர்கள் சிவலிங்க மூர்த்தி மீது விழுந்து வணங்குவதைக் காணலாம்.