பதிவு செய்த நாள்
21
ஆக
2013
04:08
செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. இவரை மகளாகப் பெறும் பாக்கியம் மூன்று பேருக்குக் கிடைத்தது. முதலாமவர் வருணன். கடலின் கடவுளான இவர் உப்பு, மீன் மற்றும் நம் தேவைக்கேற்ற தண்ணீரைத் தருபவர். அதனால்தான் லட்சுமியை சாகர புத்ரி என்கிறார்கள். இரண்டாமவர், புலோமன் என்கிற பூதங்களின் தலைவன். இவர், தான் இருக்கும் பாதாள உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் பாதுகாப்பவர். அதனால்தான் லட்சுமியை புலோமி அல்லது பாதாளவாசினி என்று அழைக்கிறார்கள். மூன்றாமவர், பிருகு முனிவர் எதிர்காலத்தைக் கணித்து, அதிர்ஷ்டத்தைத் தருபவர். அதனால்தான் லட்சுமியை பார்கவி என்கிறோம்.
வருணன் தன் லட்சுமியான மழையை எந்தத் தயக்கமும் இன்றி, வாரி அளிக்கிறான். அதனால் செழிப்பாக இருக்கிறான். புலோமன், லட்சுமியை தனது அரசியாகக் கருதி, எவருக்கும் கொடுக்காமல் தன்னிடத்தே வைத்துக் கொள்கிறான். பிருகு முனிவரோ எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. தன் மகளை வெகு அபூர்வமாகத்தான் வெளியே அனுப்பி வைக்கிறார். இந்தக் காரணங்களால்தான் பெரும்பாலான மக்களுக்கு வருணன் தாராள மனது கொண்டவனாக, அவர்களால் வணங்கத் தகுந்தவனாக இருக்கிறான். நாம் உருவாக்கும் செல்வமாக நமக்குப் பிறக்கும் மகள் கருதப்படுகிறாள். அவளைத் தகுந்த நேரத்தில் வெளியே விட்டால்தான் அவளுக்கு மதிப்பு. இதை கன்யா தானம் என்பார்கள். மகளைத் திருமணத்தில் தானமாகக் கொடுப்பது என்பார்களே.... அது தான் இது!
ஒரு காலத்தில், செல்வத்தைக் குவித்து வைத்துக்கொண்டு எவருக்கும் கொடுக்காமல் இருப்பது குற்றமாகக் கருதப்பட்டது. செல்வத்தைப் பதுக்கி வைக்கும் யட்சர்கள், அந்தக் காரணத்தாலேயே பூதங்களாகக் கருதப்பட்டார்கள். தேவர்கள், அசுரர்களுடன் மோதுகிற மாதிரி, தங்கள் சகோதரர்களான ராட்சஸர்களால் யட்சர்கள் எப்போதும் தாக்கப்பட்டார்கள். இந்தக் கதைகள், செல்வத்தைப் பலருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும், செல்வம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பாய்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நமக்குச் சொல்லித் தருகின்றன. செல்வம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், பலரிடமும் சென்று கொண்டே இருந்தால்தான் அதற்கு அதிக மதிப்பு! அப்போது தான் சமூகத்துக்கு அதனால் பெருமளவு பயன் கிடைக்கும்; தனி மனிதனுக்கும் நன்மை பயக்கும்.