பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
தேனி: தேனி மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி, செப்., 9 ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சமீப காலமாக, ரசாயன வண்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கின்றனர். இதை நீர் நிலைகளில் கரைப்பதால், நீர் மாசு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இந்த சிலைகளை மட்டும் தான், நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். தேனி மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைப்பதற்குரிய இடங்கள் விவரம்: பெரியகுளத்தில், பால சுப்பிரமணியன் கோயில் அருகே வராகநதியிலும், உத்தமபாளையம் மற்றும் கோம்பபை பகுதிகளை சேர்ந்தவர்கள் ஞானம்மாள் கோயில் படித்துறையில் உள்ள முல்லைப்பெரியாற்றிலும், கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் தொட்டாந்துறை அருகே முல்லைபெரியாற்றிலும், தேனி பகுதியில் உள்ளவர்கள் அரண்மனைப்புதூர் விலக்கு அருகே உள்ள முல்லைப் பெரியாற்றிலும், ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வைகை அணை அருகே உள்ள வைகை ஆற்றிலும் கரைக்க வேண்டும். போடி பகுதியினர் வேட்டவராயன் கோயில் அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றிலும், தேவாரம் மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர்கள் மார்க்கையன்கோட்டை ஆற்றுப்பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாற்றிலும் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பாரம்பரிய முறைப்படி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாடுமாறு கலெக்டர் பழனிசாமி, தெரிவித்துள்ளார்.