பதிவு செய்த நாள்
11
மார்
2011
05:03
ஒரு கட்டத்தில், நாககன்னிகை குழந்தையை சுதர்மனிடம் ஒப்படைத்து விட்டு தனது லோகத்துக்கு போய்விட்டாள். குழந்தை தொண்டைமானை அழைத்துக் கொண்டு சுதர்மன் அரண்மனை வந்து சேர்ந்தான். சுதர்மனின் இறுதிக்காலம் வந்தது. தொண்டைமானை ஆகாசராஜனிடம் ஒப்படைத்து, தன் உடன்பிறந்த தம்பியாக நடத்தும் படி கேட்டுக் கொண்டான். ஆகாசராஜனுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர், ஆகாசராஜனுக்கு திருமணம் நடந்தது. தரணிதேவி என்ற மாதரசி, அவனது இல்லத் தரசியானாள். நாட்டின் மகாராணியானாள். அவள் மிகுந்த அன்புடையவள். நாட்டு மக்களை அவர்கள் தங்கள் குழந்தைகள் போல நடத்தினர். செங்கோலாட்சி செய்தனர். மக்களை தங்கள் குழந்தைகள் போல பாவித்த அந்த நல்லவர்களது வீட்டில் மழலைக் குரல் ஒலிக்கவில்லை. ஆகாசராஜன் பெருமாளிடம் தனக்கு குழந்தை வரம் கேட்டு தினமும் பக்திப்பூர்வமாக வணங்கி வந்தான். ஆகாசராஜனின் குல குருவே சுகப்பிரம்ம முனிவர். சுகம் என்றால் கிளி. அந்த முனிவர் கிளி முகம் கொண்டவர். வியாசரின் புத்திரர் அவர். அந்த மகாமுனிவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். அவரை வரவேற்ற ஆகாசராஜன் தம்பதியர் தங்கள் மனக்குறையை அவரிடம் தெரிவித்தனர். சுகப்பிரம்மர் அவர்களிடம், அன்புச் செல்வங்களே! உங்கள் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து விளையாட, நீங்கள் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். முன்னொரு காலத்தில் ஜனகமகாராஜா குழந்தை யில்லாமல் இருந்த வேளையில் இந்த யாகத்தைச் செய்து சீதாதேவியை மகளாக அடைந்தார். நீங்களும் அந்த யாகத்தை செய்தால் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் அருளால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பது நிச்சயம், என்றார்.
மகான்களின் வாக்கு தவறுவதில்லை. அதிலும் தெய்வமுனிவரான சுகப்பிரம்மர் ஒன்றைச் சொல்லி அது மாறுமா என்ன! அவர் என்ன சாதாரணமானவரா! தவ வலிமை மிக்கவர் அல்லவா! குலகுருவின் யோசனையை கட்டளையாக ஏற்ற ஆகாசராஜனும், தரணி தேவியும் யாக ஏற்பாடுகளை செய்தனர். யாகத்திற்குரிய நிலம் தேர்வு செய்யப் பட்டது. யாகம் செய்யும் இடத்தில் நிலத்தை சமப்படுத்து வதற்காக, ஆகாசராஜன் தங்கக்கலப்பை கொண்டு உழுதான். சரியாக சென்று கொண்டிருந்த கலப்பை ஒரு இடத்தில் டங் என்ற சப்தத்துடன் நின்றது. ஏதோ ஒரு பொருள் நிலத்துக்குள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட ஆகாசராஜன், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டான். ஏவலர்கள் அதைத் தோண்டி, உள்ளிருந்து ஒரு பெட்டியை எடுத்தனர். ஆகாசராஜன் அதைத் திறந்து பார்த்தான். அந்தப் பெட்டியில் இருந்து பிரகாசம் கிளம்பியது, பெட்டியில் இருந்து மட்டுமல்ல! ஆகாசராஜன் தம்பதியரின் முகத்திலும் ஒளி வெள்ளம்! மகிழ்ச்சியில் அவர்கள் பூரித்துப் போனார்கள். அந்தப் பெட்டிக்குள் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ இருந்தது. அதன் நடுவில் இருந்த ஒரு பெண் குழந்தை இவர்களைப் பார்த்து சிரித்தது. ஆஹா! பூமியில் இருந்து ஒரு பொக்கிஷத்தை யாகம் நடத்தும் முன்பே ஆண்டவன் தந்துவிட்டான், என்று அவர்கள் மனம் மகிழ்ந்து கூறினார்கள். சுகப்பிரம்மர், மற்ற முனிவர்கள் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தெய்வப்பிறவியல்லவா இந்த பெண்மகள், என்று அவர்கள் குழந்தையைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஆகாசவாணி (அசரிரீ என்னும் ஆகாயத்தில் இருந்து எழும் குரல். வானில் மிதந்தபடி ஒலி அலைகளை சுமந்து வருவதால் தான் நமது இந்திய வானொலிக்கு ஆகாசவாணி என்று பெயர் வைத்தனர்) ஒலித்தது. ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன். உன் முன்ஜென்ம புண்ணியத்தின் காரணமாக நீ இந்தப் பெண்ணை மகளாகப் பெற்றாய். இந்தக் குழந்தையால் உன் வம்சமே புகழ்பெறபோகிறது, என்று சொல்லி மறைந்தது.
ஆகாசராஜன் மகிழ்வுடன் குழந்தையைக் கையில் எடுத்து உச்சி மோந்தான். பத்து மாதம் சுமக்காமல் பெற்ற பிள்ளையாயினும், தெய்வக்குழந்தையை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றேனே என தரணிதேவியும் ஆனந்தம் கொண்டாள். யாகம் ஆரம்பிக்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டாலும் கூட, துவங்கிய யாகத்தை நிறுத்தக்கூடாது என அதையும் சிறப்பாக செய்து முடித்தனர். ன்னர் ஆகாசராஜன் சுகப்பிரம்மரிடம், குருவே! எங்கள் செல்லக் குழந்தைக்கு தாங்கள் தான் பெயர் சூட்டியருள வேண்டும், என்றான்.இந்தக் குழந்தை தாமரையில் இருந்து வந்தவள். தாமரையை பத்மம் என்பர். பத்மத்தில் இருந்து தோன்றிய இவள் பத்மாவதி எனப்பட்டால் பொருத்தமாக இருக்கும், என்றார் சுகப்பிரம்மர். அந்தக் கருத்தை சிரமேல் ஏற்ற ஆகாசராஜன் அந்தப் பெயரையே குழந்தைக்கு சூட்டினர். இருப்பினும், யாகத்தின் பலனும் தரணிதேவிக்கு கிடைத்தது. சில காலம் கழித்து அவள் கர்ப்பமானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வசுதானன் என்று பெயரிட்டனர். பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் ஒரே நேரத்தில் கிடைக்க, பிள்ளையில்லாமல் இருந்த அந்த தம்பதிகள் ஆனந்தமாய் அவர்களை வளர்த்து வந்தனர். பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. செல்வச்சீமாட்டியாக வளர்ந்தாள் பத்மாவதி. பிறகென்ன! லட்சுமி புகுந்த வீட்டிலேயே செல்வம் செழிக்குமென்றால், லட்சுமி பிறந்த வீட்டில் செல்வ வளத்துக்கு என்ன குறை இருக்கும்! அவள் பட்டிலும், படாடோபத்திலும் புரண்டாள். அவளுக்கும் சுகப்பிரம்ம மகரிஷியே குருவாக இருந்து சகல கலைகளையும் கற்றுத்தந்தார். பதினைந்து வயது பருவமங்கை! அவளது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.ஒருநாள் வெள்ளிக்கிழமை. புனிதமான ஆன்மிக நாள். அன்று பூஜைகளை முடித்த பிறகு, அரண்மனையின் அந்தப்புரத்தில் தன் தோழிகளுடன் பத்மாவதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, கலகக்காரரான நாரத மகரிஷி அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.