பதிவு செய்த நாள்
27
செப்
2013
10:09
சசீந்திரம்: சுசீந்திரம் பகுதியில் சுசீந்திரம் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு கடைகளை தேவசம்போர்டு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால் பரபப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட தேவசம் போர்டுக்குச் சொந்தமான 490 கோயில்களும், கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில், கொட்டாரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கடைகளும் உள்ளன. பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக கோயில் அலுவலகத்தில் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும் என, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்தது. இதில் பல கடை உரிமையாளர்கள் தங்களது கடையின் வாடகை நிலுவைத்தொகையைச் செலுத்தினர். வாடகை நிலுவைத்தொகையைச் செலுத்தாத கடைகளுக்கு நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது. இந்நிலøயில், சுசீந்திரம் பகுதியில் இயங்கிவரும் பாண்டியன் விலாஸ் மிட்டாய் கடை மற்றும் இதன் அருகில் உள்ள சிதம்பரதாணுபிள்ளை என்பவர் அனுபவித்து வந்த கடையும் வாடகை நிலுவைத்தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதில் மிட்டாய் கடை 82ஆயிரம் ரூபாயும், அருகில் உள்ள கடை ஏழு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் வாடகை நிலுவைத்தொகையாக பாக்கி வைத்திருந்தன. இதன் காரணமாக, இந்த கடைகளை சீல் வைப்பதற்காக நேற்று காலை கன்னியாகுமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோயில் கண்காணிப்பாளர் சோணாச்சலம், ஆக்ரமிப்பு மீட்புக்குழு தலைவர் ஜூவானந்தம், கோயில் மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இந்த கடைகளை சீல்வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மிட்டாய் கடை உரிமையாளர் உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் கோயில் நிர்வாகத்திடம் அளித்ததால் இந்த கடைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அருகில் உள்ள சிதம்பரதாணு என்பவர் அனுபவித்து வரும் கடையின் சார்பில் கோர்ட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாக வருவாய் கோர்ட் உத்தரவுப்படி நிலுவைத்தொகையைச் செலுத்தாத இந்த கடைக்கு சீல் வைக்க தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவிட்டார். உடனடியாக கோயில் ஊழியர்கள் இந்த கடையின் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவசம் போர்டுக்கு கீழ் உள்ள வாடகை செலுத்தாத அனைத்து கடைகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுசீந்திரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.