மகான் ஒருவரை பக்தன் சந்தித்தான். சுவாமி! எனக்கும் எல்லாம் தெரியும். ஆனாலும், சரியான தொழில் அமையமாட்டேன் என்கிறது என்றான். எல்லாம் தெரிந்தவர் உலகில் யாருண்டு! முதலில் உன்னை உனக்கே தெரியுமா? என்று கேட்டார் மகான். ஏன் தெரியாது! இதோ, இவ்வளவு பெரிய உடம்புடன் நிற்கிறேனே! இதுவுமா தங்களுக்குதெரியவில்லை! எனக்கு தெரிவது இருக்கட்டும்! முதலில், உன் உடம்பையாவது நீ பார்த்திருக்கிறாயா! ஓ நன்றாகத் தெரிகிறதே!. உன் முதுகைப் பார்த்திருக்கிறாயா? இப்படி மகான் கேட்டதும் பக்தனுக்கு ஏதோ இடித்தது. இல்லை சுவாமி. பின்புறம் தெரியவில்லை. முன்புறம் நன்றாகத் தெரிகிறது. அவசரப்படாதே! உன் முகத்தையும் கண்களையும் நீயே பார்த்ததுண்டா? பக்தன் விழித்தான். உன் முதுகையும், முன்புறத்தையும் பார்க்க வேண்டுமானால் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடிகள் வேண்டும். அதுபோல், ஒருவன் தன்னை முழுமையாக அறிய வேண்டுமானால் கடவுளின் அருள் என்னும் கண்ணாடியும், அதைப் பெறுவதற்கு நல்ல குருநாதர் என்னும் கண்ணாடியும் வேண்டும். திருவருளும், குருவருளும் இருந்தால் உன்னை நீ அறியலாம், என்றார் மகான்.