பதிவு செய்த நாள்
11
அக்
2013
10:10
பழநி: தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக திகழ்கிறது. இங்கு தினமும் சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா ரீதியாகவும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு 25 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அதனால் பழநி அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலில் உள்ள முருகனை பக்தர்கள் எளிதில் தரிசிக்கும் வகையில் ஆரம்பத்தில் மின் இழுவை ரயில் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக 2004 நவ 3ம் தேதி ரூ.4 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் அடிவாரத்தில் இருந்து மேல்நோக்கி 4 பெட்டிகளும், மேல் இருந்து கீழ் நோக்கி 4 பெட்டிகளும் மொத்தம் 8 பெட்டிகள் இயக்கப்பட்டன. ஒருபெட்டியில் 4 பேர் பயணம் செய்து வந்தனர். இதன் மூலம் வயதான பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக மலைக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து பயனடைந்தனர்.
இந்நிலையில் முதல் ரோப்கார் திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடிக்கடி பழுதடைந்து விபத்துகள் ஏற்பட்டன. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அதனால், கடந்த சில ஆண்டாக 2வது ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை டெண்டர் எடுத்து செயல்படுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டததால், 2வது ரோப்கார் திட்டத்தை செயல்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2வது ரோப்கார் திட்டம் தற்போது தான் முழு செயல்வடிவத்துக்கு வந்துள்ளது. முதல் ரோப்கார் திட்டத்தில் அடிக்கடி 2வது ரோப்காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாமல் இருக்க உள்நாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து 2வது ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் விட முடிவு செய்தோம்.
அதற்காக கடந்த ஜூலை மாதம் டெண்டர் வெளியிட்டோம் கடந்த செப் 30ம் தேதி கடைசி தேதி,. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கி, வரும் 30ம் தேதி டெண்டர் கடைசி தேதியை நீட்டித்துள்ளோம். டெண்டரில் ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளன,. இந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி 2வது ரோப்காருக்கான அரசு ஆணை (ஒர்க் ஆர்டர்) வழங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில் 2வது ரோப்கார் திட்டத்தை உருவாக்கி 2014 ம் ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ 18 கோடியில் 2வது ரோப்கார் திட்டத்தை உருவாக்க கோயில் தேவஸ்தானம் திட்டமதீப்பீட்டுக்கான தயார் பணியில் ஈடுபட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிக்கு தகுந்தவாறு இந்த திட்டமதிப்பீடு உயரவும் வாய்ப்புள்ளது. 2வது ரோப்கார் திட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 1,400 முதல் 1500 பக்தர்கள் வரை சென்று வரும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த ரோப்கார் 2 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைகோயிலுக்கு சென்றுவிடும். பெட்டிகள் எண்ணிக்கை, ஒவ்வொரு பெட்டியில் பயணம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை என்றார்.