பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில், பக்தர்களின் பொருட்கள் வைக்கும் அறை, தயார் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி ,பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் எஸ்.ஐ., தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ,ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி கோயில்களின் நுழைவு வாயில்களில், மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் நிறுவப்பட்டு, பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின், அனுப்பட்டு வருகின்றனர். ஆண்டாள் கோயிலை சுற்றிய மாடவீதிகளில், கோயில் சுவர் ஓரங்களில் வளர்க்கப்பட்ட மரங்களும் வெட்டப்பட்டன. கோயிலை சுற்றி, கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டது. இந்நிலையில், வடபத்சாயி கோயில்களில் பாதுகாப்பு காரணத்திற்காக, கோபுரத்தில் நடந்த பெயின்டிங் வேலைகளுக்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒலைகளும், கடந்த சில தினங்களுக்கு முன் அகற்றப்பட்டன. ஆடிப்பூர மண்டபத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் போது, தங்கள் கொண்டு வந்த பைகளுடன் செல்வதை தடுக்கும் விதத்தில், அவர்களின் பொருட்களை பாதுகாப்பதற்காக வைப்பதற்காக, அறையும் தயார் செய்யப்பட்டு வருகிறது. கோயில் செயல் அலுவலர் சுப்பிரமணியன்,"" பாதுகாப்பு காரணங்களுக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள், தங்கள் கொண்டு வரும் பொருட்களை வைப்பதற்காக, பாதுகாப்பறை செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் இப்பணி முடிவடைந்து, செயல்பாட்டிற்கு வந்து விடும், என்றார்.