Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2011
03:03

சிறு வயதிலேயே முகுந்தனுக்குக் கடவுள் பக்தி அதிகம். கோயிலுக்குச் செல்வதிலும், சந்நியாசிகளை தரிசிப்பதிலும் அவனுக்கு அப்படியொரு ஈடுபாடு! ஒருமுறை, அண்ணனைக் காண ஆக்ராவுக்குச் சென்ற முகுந்தனிடம், நீ இப்படிக் கோயில், குளம், சாமியார் என்று அலைந்தால், அப்பாவின் சொத்தில் ஒரு நயாபைசாகூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும் என அறிவுறுத்தினார் அண்ணன். ஆனால் முகுந்தனோ, எனக்குத் தேவையானதை கடவுள் தருவார் என்றான் உறுதியாக! இதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்த அண்ணன், அப்படியா சேதி..? சரி .. இங்கிருந்து மதுரா செல்வதற்கு, உனக்கும் உன் நண்பன் ஜிதேந்திராவுக்கும் ரயில் டிக்கெட் மட்டுமே எடுத்துத் தருவேன்; செலவுக்குக் காசு தரமாட்டேன். நீங்கள் இருவரும் மதுராவில் வயிராகச் சாப்பிட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தபின், பிருந்தாவனம் முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு ஆக்ராவுக்கு திரும்பவேண்டும். எவரிடமும் பணம் கேட்கவோ, திருடவோ கூடாது. இதில் நீ ஜெயித்துவிட்டால், நானே உனக்குச் சீடனாகிவிடுகிறேன் என்றார். சவாலை ஏற்றுக்கொண்டு, ஜிதேந்திராவுடன் புறப்பட்டான் முகுந்தன். மதுராவுக்கு முந்தைய ரயில்நிலையத்தில், நடுத்தர வயதுடைய இரண்டு பேர் ஏறி, இவர்களுக்கு எதிரில் அமர்ந்தனர். மதுராவில் இறங்கியவர்கள், முகுந்தனையும் ஜிதேந்திராவையும் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றனர். அந்த வண்டி, ஓர் ஆஸ்ரமத்தை அடைந்தது. அங்கிருந்த பெண்மணியிடம், கௌரிம்மா, இளவரசியால் வரமுடியவில்லையாம். சேதி வந்தது. ஆனால், சமைத்த விருந்து வீணாகிவிடக் கூடாதே என்பதால், இரண்டு கிருஷ்ண பக்தர்களை அழைத்து வந்துள்ளோம் என்றனர். உடனே முகுந்தனையும் ஜிதேந்திராவையும் உள்ளே அழைத்துச் சென்று, முப்பது வகை பண்டங்களைப் பரிமாறினாள் கௌரிம்மா. கிட்டத்தட்ட ராஜ விருந்துதான்!

பிறகு ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பியவர்கள், இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் நின்றனர். அப்போது அவர்களை நோக்கி ஓடி வந்த ஓர் இளைஞன், முகுந்தனை வணங்கினான். என் பெயர் பிரதாப். என் கனவில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், உங்கள் இருவருக்கும் பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். தயவு செய்து மறுக்காதீர்கள்! எனக் கெஞ்சி, அவர்களின் பதிலுக்குக் காத்திரமால், இருவரையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று, கிருஷ்ண தரிசனம் செய்து வைத்து, பிருந்தாவனத்தையும் சுற்றிக் காட்டினான். இருட்டத் துவங்கியதும், ஆக்ரா செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகளையும் அவனே வாங்கித் தந்தான். எல்லாவற்றையும் கண்டு அழுதேவிட்டான் ஜிதேந்திரா, ஆக்ராவுக்கு வந்ததும், அண்ணனிடம் நடந்ததை முகுந்தன் விளக்க... நெக்குருகிப் போன அண்ணன் அனந்தன், தம்பி முகுந்தனுக்குச் சீடரானார். நம்பிக்கை, கடவுளைவிட மேலானது! என உணர்த்திய அந்த முகுந்தனே, அன்பின் அவதாரம் எனப் பின்னாளில் போற்றப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தர். உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில், 1893 ஜனவரி 5-ஆம் தேதி, வங்காள க்ஷத்ரியக் குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு, முகுந்தலால்கோஷ் எனப் பெயரிட்டனர் பெற்றோர். இளம் வயதிலேயே இறை பக்தியுடன் வளர்ந்த முகுந்தன், குருவைத் தேடி கோயில் கோயிலாக, ஆஸ்ரமம் ஆஸ்ரமமாக அலைந்தான். மகா ஞானியும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பூவுலகில் இருந்தபடி அருள்புரிவதாகக் கருதப்படுவருமான மகாவதார் பாபாஜியின் சீடர், ஞானி லஹரி மகாசாயா. இவருடைய அன்புச்சீடரான யுக்தேஷ்வர்கிரியின் அருட் பார்வை, 1910-ஆம் வருடம், முகுந்தனுக்குக் கிடைத்தது. அப்போது முகுந்தனுக்கு 17 வயது. குருவின் பார்வை பட்டதும், தேகம் சிலிர்த்தது முகுந்தனுக்கு. யுக்தேஷ்வர், இறைவனைத் தரிசித்த மகான். நமக்கு நல்வழி காட்டுபவர் இவரே! என உணர்ந்து, அவரைச் சரணடைந்தான். யுக்தேஷ்வரும், வா  குழந்தாய்! உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன். உன்னை என்னிடம் அனுப்புவதாக பாபாவே சொல்லியிருக்கிறார் என்று அவனை அன்புடன் வரவேற்று, ஆசீர்வதித்தார்.

1915-ல், தனது 22-வது வயதில் துறவறம் மேற்கொண்ட முகுந்தன், அன்று முதல் யோகானந்த கிரி என அழைக்கப்பட்டார். இந்த உலகுக்கு அவர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டாரோ, அந்தக் கடமையை நிறைவேற்ற ஆங்கிலக் கல்வி அவசியம் என உணர்ந்த குருநாதர், யோகானந்த கிரியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தார். அவரும் பட்டம் பெற்றார். யோகானந்த கிரியின் பிறப்பின் குறிக்கோள் நிறைவேறும் காலம் நெறுங்கியது. 1920 ஆம் வருடம், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள, கப்பல் பயணம் மேற்கொண்டார் யோகானந்த கிரி. கிரியா யோகம் என்கிற அற்புதமான யோகக் கலைப் பயிற்சி, பாரத மண்ணில் ரிஷிகள், ஞானிகள் ஆகியோரால் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுசரிக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வருகிறது. உடலின் இயக்கத்தையும் உள்ளத்தின் ஓட்டத்தையும் இணைத்து, பயிற்சியாலும் தியானத்தாலும் மனித உயிர்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் அந்த சூட்சுமக் கலை, மகாவதார் பாபாவிடமிருந்து, அவருடைய சீடர் பரம்பரை மூலம் யோகானந்த கிரிக்குக் கிடைத்தது. பாஸ்டன் மாநாட்டில் இந்து சமயப் பாரம்பரியம், யோகக் கலை, தியான நிலை ஆகியவை குறித்து அவர் ஆற்றிய உரை, அமெரிக்க மக்களை வியக்க வைத்தது. அந்த மண்ணில் தனது பணியைத் துவக்கியவர், அந்த வருடம் தன்னிலை உணர்வோர் சங்கம் எனும் இயக்கத்தையும் துவக்கினார். அமெரிக்கர்களிடையே இந்த யோகக் கலைப் பயிற்சியை அறிமுகப்படுத்தி, போதித்தார்.

இறையுணர்வு என்பது மூட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது அல்ல. நேரடியான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. இறைவன் என்ற பேருண்மையை அனுபவித்து அறிதலே ஞானம். பிரபஞ்சம், இறைவனின் நாடக அரங்கம். அவர் நடத்தும் நாடகத்தில், நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். இறப்பு, மறுபிறப்பு என்பவை, ஒரு பாத்திரத்தில் நடித்து முடித்து, மற்றொரு பாத்திரத்தை ஏற்று நடிப்பது போலத்தான். இங்கே, மனிதர்களது துன்பங்களுக்குக் காரணம், அவர்கள் தாங்கள் ஏற்கும் பாத்திரத்துடன் ஒன்றிவிடுவதே! அதை விடுத்து, நாடகத்தின் சூத்ரதாரியான இறைவனிடம் ஒன்றுவதே, நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு. கிரியா யோகம், தியானம் ஆகியவற்றின் மூலம் இறைவனை அடையலாம் எனும் அவரது போதனைகள், அங்கே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. பிறகு யோகானந்த கிரி, குருநாதரை தரிசிக்கும் ஆவலுடனும், சத்சங்கப் பணியை இந்திய மண்ணில் பரப்பும் எண்ணத்துடனும், 1935- ஆம் வருடம் இந்தியாவுக்கு வந்தார். மகாத்மா காந்தி, சர்.சி.வி ராமன் முதலான சான்றோர்களைச் சந்தித்து, தனது கருத்துக்களை வலியுறுத்தினார். குருநாதர் யுக்தேஷ்வரைச் சந்தித்து நமஸ்கரித்தார். தனது சீடரின் வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைந்த குருநாதர், ஆன்மிகக் கரையைத் தொட்டவர் எனும் பொருள் படும்படி, பரமஹம்ஸர் எனும் பட்டத்தை யோகானந்த கிரிக்கு வழங்கினார். பிறகு, சில நாளில் இறைவனின் திருவடி சேர்ந்தார் குருநாதர்!

பரமஹம்ஸ யோகானந்தர், 1936- ஆம் வருடம் அமெரிக்கா திரும்பி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை தொடர்ந்தார். ஒரு யோகியின் சுயசரிதை எனும் தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம், உலகின் பெரும்பாலான மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அதிக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில், இன்றைக்கும் முக்கிய இடத்தில் உள்ளது அந்த நூல்! 1952-ஆம் வருடம், மார்ச் 7- ஆம் தேதி, அமெரிக்காவின் இந்தியத் தூதருக்கும் அவருடைய மனைவிக்கும், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட பரமஹம்ஸ யோகானந்தர், கங்கை நீர், இமயமலைக் குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக் கொண்ட பாரதப் புனித மண்ணை இந்த உடல் ஸ்பரிசித்ததே பெரும்பேறு! என்று சொல்லியபடியே சரிந்து விழுந்தார்; இறைவனுடன் இரண்டறக் கலந்தார்! அந்த நகரில் உள்ள, இறந்தவர் உடல்களைப் பாதுகாக்கும் பிணவறையின் இயக்குநர் எழுதிய கடிதம் ஒன்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழில், 1952- ஆம் வருடம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியானது. அதில், இறந்து 20 நாட்களான பின்பும், பரமஹம்ஸ யோகானந்தரின் உடல், மிக நல்ல நிலையிலேயே இருந்தது. உடலின் எந்தப் பகுதியும் கெடவில்லை; துர்நாற்றமும் வீசவில்லை. உயிரற்ற உடல் ஒன்று, இத்தனை நாட்கள் கடந்தும்கூட, நல்லநிலையில் இருப்பது, இதுவரை நடந்திராத அதிசயம்! என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு, பல நாட்கள் கழித்து, யோகானந்தரின் திருமேனி, கலிபோர்னியா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யோகக் கலையின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்திய மகானான பரமஹம்ஸ யோகானந்தரின் புகழ், உலகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar