பதிவு செய்த நாள்
25
அக்
2013
01:10
சிவபெருமான் ஞானப்பழத்தை, விநாயகர் முருகன் இருவரில் யாருக்குக் கொடுப்பது என்பதில் நடத்திய திருவிளையாடல் நமக்குத் தெரிந்ததே ! ஆனால், பரமேஸ்வரன் இதேபோன்று இன்னொரு திருவிளையாடல் நடத்தி, தம் புதல்வர்களை சோதனைக்குள்ளாக்கி உள்ளார். ஒருசமயம், சிவபெருமானுக்கு ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி, திருக்கயிலாயத்திலிருந்து தம்மை வழிபட்டு சேவை செய்கிற கணங்கள் அனைத்திற்கும் அதிபதியாக கணேசனை நியமிக்கலாமா? கந்தனை நியமிக்கலாமா? என்று அவர் மனதில் குழப்பம் ஏற்பட்டது. பலவாறு யோசனை செய்த பரமேஸ்வரன், இறுதியில் ஞானப்பழத் திருவிளையாடல் போன்று இன்னொரு திருவிளையாடல் நடத்தத் திட்டமிட்டார். அந்தச் சோதனையில் வெற்றிபெறும் மகனுக்கே கண அதிபதி பட்டம் சூட்ட முடிவு செய்தார். அதன்படி விநாயகரையும் முருகனையும் அழைத்து உங்கள் இருவரில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ, அவரை என்னைச் சுற்றியுள்ள கணங்களுக்குத் தலைவன் ஆக்குகிறேன் என்றார்.
ஏற்கெனவே ஏமார்ந்த முருகன், இந்த தடவை சாமர்த்தியமாக தாய் தந்தையரை உடனே சுற்றி வலம் வந்தார். இம்முறை அண்ணன் கணேசனை முந்திவிட்ட ஆனந்தம் ! விநாயகர் விடுவாரா என்ன? ராம நாமத்துக்குள் இந்தப் பிரபஞ்சமே அடங்கியுள்ளது என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த அவர், தரையில் ராம என எழுதி, அதைச் சுற்றிவந்து முருகனை முந்திவிட்டார். வெற்றியும் பெற்றுவிட்டார். விநாயகரின் புத்திசாலித்தனத்தை அறிந்து வியந்த ஈசன், மூத்த மகனைப் பாராட்டி கணங்களுக்குரிய அதிபதி பதவியை வழங்கி, விநாயகா, இனி நீ கணபதி என்ற திருநாமம் பெற்று விளங்கிடுவாய் என அருள்புரிந்தார்.