கடவுளைத் தாயாக, தந்தையாக, நண்பராக உறவு நிலையில் வைத்து வழிபடுவதுண்டு. அவரை ஆசிரியர் நிலையில் வழிபடுவதே தட்சிணாமூர்த்தி வழிபாடு. தட்சிணம் என்றால் தெற்கு. கல்லால மரத்தின் அடியில் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால், இவருக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர். வாய் திறக்காமல், மவுனகுருவாக இருந்து பாடம் கற்பிக்கும் இவரை ஊமைத்தேவர் என்பர். மூன்று விரல்களை நீட்டி, இரண்டு விரல்களை மடக்கி, இறைவனை அடையும் பாதையை இவர் எளிமையாக விளக்குகிறார். ஆணவம், கன்மம் (பாவத்தை விடுதல், புண்ணிய பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல்), மாயை (இந்த உலக வாழ்வு உண்மையானது என்று நம்புதல்) ஆகியவற்றை விட்டு, பக்தியின் மூலம் இறைவனை அடைய வேண்டும் என்று இவர் போதிக்கிறார். இவரது திருவடியில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனிவர்கள் மாணவர்களாக உள்ளனர்.