மனிதனுக்கு எதையெடுத்தாலும் குழப்பமாகவே இருக்கிறது. தெளிந்த புத்தி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்த குழப்பத்தைப் போக்கி மனிதனைக் காக்க ஆதிசங்கரர் எழுதிய பாடலே மோக முத்கரம். மோகமுத்கரம் என்றால் ஆசையை உடைக்கும் சம்மட்டி. இதை பஜகோவிந்தம் என்றும் சொல்வர். இதனைப் படித்தால் பிறவிக்கடலை, சிறிய ஓடையைத் தாண்டுவது போல எளிதாகத் தாண்டி விடலாம். இதன் முதல்வரி பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே என்று துவங்கும். பஜகோவிந்தம் என்பதை மூன்றுமுறை கூறுகிறார் சங்கரர். ஏதேனும் ஒன்று உறுதியாக நடக்கும் என்றால் தான், அருளாளர்கள் அதை மூன்று முறை சொல்வார்கள். கோலாகலமான வாழ்க்கை வாழ கோவிந்தனைச் சரணடைவது ஒன்றே வழி. பஜ கோவிந்தம் என்றால் நமக்கு நற்கதியைத் தருவது கோவிந்த நாமம் என்று பொருள்.