பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
ஆர்.கே.பேட்டை : கேதார கவுரி நோன்பு, நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து, சிவாலயங்களில் திரளான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர். தீபாவளிக்கு அடுத்த நாள், கேதார நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந்தனர். ஆர்.கே.பேட்டை, வாடாவல்லி சமேத விசாலீஸ்வரர் கோவில் மற்றும் பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன், கோவிலுக்கு சென்று நோன்பு படையலை சுவாமிக்கு படைத்தனர். அவரவர்கள் குடும்ப வழக்கப்படி, 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 பாக்கு மற்றும் நெய்யில் செய்யப்பட்ட வடை அல்லது அதிரசம் 21 எண்ணிக்கையுடன், நோன்பு கயிறும் படைத்தனர். சிவன் கோவில்களில் உள்ள அம்மன் மற்றும் விநாயகருக்கு நோன்பு படைக்கப்பட்டது.