நன்றாகப் பேசும் குழந்தைகளைக் கண்டால் இவன் மணி மணியாய் பேசுறானே! என்று சந்தோஷமாகச் சொல்வோம். இதுபோல், பக்தியில் சிறந்தவர்களை பக்த சிரோன்மணி என்று கொண்டாடுவர். பக்தர்களில் தலைசிறந்தவர் என்பது இதன் பொருள். சிவன் மீது அழகுத்தமிழில், மணி மணியாக நல்ல பாடல்களை வழங்கிய அருளாளர் மாணிக்கவாசகர். இவர் பிறந்தது மதுரை அருகிலுள்ள திருவாதவூர். ஊரின் பெயரையே இவருக்கு சூட்டி வாதவூரார் என அழைத்தனர். தன்னைப் பற்றி மணியான பாடல்களைப் பாடியதால் சிவபெருமானே இவரை மணிவாசகர் என அழைத்தார். அதுவே மாணிக்கவாசகர் என மாறியது. மார்கழி மாதத்தில் இவர் பாடிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒலிக்காத சிவாலயங்களே கிடையாது. கொட்டும் பனியில், பஜனைக் குழுவினர், உள்ளம் உருக பாடுவதைக் கேட்க காதுகள் இனிக்கும். இவருடைய பாடல்களைப் பக்தியுடன் பாடும் அனைவருமே சிவனருள் பெற்று பக்தசிரோன்மணியாகி விடலாம்.