பதிவு செய்த நாள்
28
நவ
2013
10:11
ஈரோடு: சித்தோடு அடுத்த தங்கமேட்டில் உள்ளது, தம்பிக்கலையன் கோவில். யோக கலையின் மூலம் சாரூபமுக்தி எனும் இறைவனின் திருவுருவமே தம்பிக்கலையன் ஸ்வாமியாக உள்ளது. பத்து ஏக்கர் பரப்பில் இயற்கை எழில் சூழ்ந்த, அமைதியான இடத்தில் இக்கோவில் உள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிகின்றனர். கோவிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புற்றுக்கண்ணில் இருந்து நாகங்கள் அடிக்கடி காட்சி தருவதால் பக்தர்கள் பரவசப்படுவர். இந்நாகவனத்தில், ஸ்ரீராகு, ஸ்ரீகேதுவும், சிவகங்கை தீர்த்தக்குளம் எனும் தீர்த்தத்தை சர்ப்பதோஷம் போக்க அமைத்து, ஈசனையும், அம்பாளையும் வழிபட்டதால், ராகு, கேது திருத்தலமாகவும், தம்பிக்கலையன் கோவில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநோதமாக பிறக்கும் கால்நடைகளையும், பறவை இனங்களையும், தம்பிக்கலை ஐயனுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் இக்கோவிலில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களை, விநோத பிறப்பின் மூலமும் கடவுள் அருள்பாலிப்பார் என்ற நோக்கத்தை உணர்த்துவதாக, பக்தர்கள் பரவசம் கொள்கின்றனர். இதுகுறித்து தம்பிக்கலையன் கோவில் பக்தர்கள் கூறியதாவது: கொடிய விஷத்தை தீர்த்தத்தின் மூலம் முறிக்கும் சக்தி கொண்டவர், சித்தோடு தங்கமேட்டடில் அருள்பாலிக்கும் தம்பிக்கலையன். இக்கோவிலில், நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் கோழி, பின்புற உடலிலும், தலையிலும் கால் முளைத்த ஆடுகள், தோகை விரித்தவாறே இருக்கும் மயில் என பல வகையான வித்தியாசமான படைப்புகளை, தம்பிக்கலையன் கோவிலில் காணலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிறக்கும் இதுபோன்ற வித்தியாசமான உயிர்களை தம்பிக்கலையனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம், தம்பிக்கலையனின் அருள் பெறலாம். வித்தியாசமான ஜீவன்கள் மூலமும், தம்பிக்கலையன் அருள்பாலிப்பார் என்பதால், ஆறு கால் ஆடுகள், நெஞ்சு நிமிர்ந்த கோழி, மயில் ஆகியவற்றை, ஐயனாகவே பக்தர்கள் பாவிக்கின்றனர். அவற்றுக்கு, பிரசாதங்களை வழங்கி மகிழ்கின்றனர், என்றனர்.