பதிவு செய்த நாள்
28
நவ
2013
11:11
தூத்துக்குடி: தமிழகத்தில் வறட்சி நீங்கவும், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கவும் தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் கால பைரவருக்கு பைரவ யாகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள அய்யனடைப்பு சித்தாநகரில் தமிழகத்தில் மிக உயரமான 11 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிரா தேவி, கால பைரவர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடந்து வருகிறது.இந்நிலையில் பைரவ அஷ்டமியை முன்னிட்டு தமிழகத்தில் வறட்சி நிலவும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வளம் பெற வேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்கள், உடல் பிணிகள் நீங்கி நலமாக வாழ வேண்டியும் பிரத்தியங்கிராதேவி, கால பைரவருக்கு பைரவ யாகம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு யாகம் வழிபாடுகளை பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் முன்னிலையில் நடந்தது. யாகத்தை ஒட்டி அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.