பதிவு செய்த நாள்
02
டிச
2013
02:12
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்த தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் சுவாதி நட்சரத்தில் ஆலங்காட்டீசர் ஆலய சென்றாடு தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது. முன்னதாக காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 7:00 மணிக்கு வண்டார் குழலியம்மை, சமேத வடாரண்யேஸ்வர சுவாமி சென்றாடு தீர்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர், அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, (நேற்று முன்தினம்) இரவு, 7:30 உற்சவ பெருமான் குளத்தை மூன்று முறை வலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பலில் வீரமணியின் பக்தி கச்சேரி நடந்தது. தெப்பம் வலம் வரும் போது சில பக்தர்கள், கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, வழிப்பட்டனர். விழாவை ஓட்டி கோவில் மற்றும் குளத்தை சுற்றியும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி. சரவணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.