பதிவு செய்த நாள்
02
டிச
2013
03:12
மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம், கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி எடுத்ததற்கான நோக்கம். ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால், அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை அடைந்தோம் என்ற சந்தோஷம். அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ, சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது, அவ்வளவுதான் என்று வருத்தப்படும். அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை. அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், மகாலட்சுமி மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்... என்று எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள். அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.