அம்பாள் கோயில்களில் கஞ்சி படைப்பது வழக்கம். குறிப்பாக, ஆடிமாதத்தில் ஆடிக்கஞ்சி என்றே சொல்வார்கள். ஆனால், கஞ்சி குடிக்காதவள், கம்பஞ்சோறு உண்ணாதவள், வெஞ்சினங்களை (காய்கறிகள் சேர்த்து சமைத்த சாதம்) விரும்பாதவளாக ஒரு அம்பாள் இருக்கிறாள். யார் அவள் என்றால் காஞ்சி காமாட்சியம்மனைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல். கஞ்சி குடியாளே கம்பஞ்சோறு உண்ணாளே வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே என்ற பாடல் அது. இதில் கஞ்சி குடியாளே என்றால் காஞ்சிபுரத்தில் வசிப்பவள் என்று பொருள். இன்னொரு அர்த்தமும் உண்டு. கஞ்சி என்னும் சொல்லுக்கு தாமரை என்றும் ஒரு பொருளுண்டு. கஞ்சி குடியாள் என்றால் தாமரையை தன் முகத்தில் குடிவைத்தவள், அதாவது தாமரை மலர் போன்ற முக அழகுடன் திகழ்பவள் என்றும் ஒரு பொருளுண்டு.