முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் பழநிக்கு "பொதினி என்றொரு பெயர் உண்டு. கடையேழு வள்ளல்களில் ஒருவர் பேகன். இவர் கொங்குநாட்டின் அரசராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், பழத்திற்காக கோபித்து குன்றின் மேல் நின்ற முருகப்பெருமான் அருளும் பழநி திருத்தலத்திற்கு "பொதினி என்று பெயர் இருந்தது. இதன்பிறகு, "ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. "ஆவி என்னும் வேளிர் தலைவன் ஆண்ட பகுதியில் இந்த ஊர் இருந்ததால் ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனுடன் "திரு என்ற அடைமொழி சேசர்த்து, "திருவாவினன்குடி என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போதும் பழநி மலை அடிவாரத்திலுள்ள கோயிலை "திருவாவினன்குடி கோயில் என்றே கூறுகின்றனர். இங்கே முருகப்பெருமான் "குழந்தை வேலாயுதர் என்னும் திருப்பெயர் தாங்கியிருக்கிறார். பழநி மலைக்கு காவடி எடுப்பவர்கள், இங்கிருந்தே புறப்படுவது வழக்கமாக இருக்கிறது. இன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்திலும் வள்ளி தெய்வானை சசமேத முத்துக்குமார சுவாமி வீதியுலா வருவார்.