பதிவு செய்த நாள்
23
ஜன
2014 
11:01
 
 பழநி: எடப்பாடி, பர்வதராஜகுல மகா ஜனங்கள் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காவடிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன், பழநி வந்தடைந்தனர். நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர். பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜன., 14 ல் புறப்பட்டு, பழையபேட்டை, வெள்ளாண்டிவலசை, புதுப்பேட்டை, சின்னமணலி, இடைப்பாடி, க.புதூர் போன்ற ஊர்காவடிகள் ஒன்றிணைந்து, நகர் ஊர் வலமாக, பழநிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். ஜன.,21ல் அமராவதி ஆற்றில் நீராடி, மானூர் ஆற்றில் காவடிகளுடன் நேற்று மகாபூஜை செய்து பின் பழநியை வந்தடைந்தனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், பல வண்ணப்பூக்களால், "ஓம் சரவணபவ வடிவில் ரங்கோலி வரைந்திருந்தனர். மாலையில் காவடிகள் முத்திரை செலுத்தி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து, எடப்பாடி பருவதராஜகுல மகாஜன, பழநியாண்டவர் காவடி கமிட்டியினர் சார்பில், உச்சிகால அன்னதானம் வழங்கப்பட்டது. இராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்து, நேற்றிரவு மலைக்கோயிலில் தங்கினர். காவடி கமிட்டியினர் கூறியதாவது: எங்கள் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் இளநீர், சர்க்கரை, பால் காவடிகள் எடுத்து வந்துள்ளோம். இரவு மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்கிறோம். ஏற்கனவே தயார் செய்துள்ள 10 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வழங்கி, எங்கள் மடத்தில் தங்கி கணக்குகள் சரிபார்த்து விட்டு, ஊருக்கு புறப்படுவோம். 355 ஆண்டுகளாக, பலநூறு குடும்பங்கள் இணைந்து வழிபாடு நடத்துகிறோம், என்றனர்.