பதிவு செய்த நாள்
04
பிப்
2014
11:02
மீஞ்சூர்: ஏகாம்பரநாதர் கோவில் கோபுர பணிகள், மந்த கதியில் நடந்து வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மீஞ்சூர், காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில், 2008ம் ஆண்டு தனியார் பங்களிப்பின்கீழ் கோவில் முகப்பில், 63 அடி உயரத்தில், கோபுரம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடித்து தருவதாக கூறப்பட்ட நிலையில், ஐந்து ஆண்டுகள் முடிந்தும், கோபுர பணிகள் பாதியில் நிற்கிறது. முகப்பு வாயில் கதவுகள் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், இரவு நேரங்களில் அன்னிய நபர்களின் நடமாட்டமும் உள்ளது. கோபுர பணிகளினால், ஐந்து ஆண்டுகளாக, சுவாமி ஊர்வலம் நடத்தப்படாமல் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷங்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. கோபுர பணிகள் தாமதத்தினை கண்டு, கோவில் விசேஷங்களுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். கோபுர பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.