பதிவு செய்த நாள்
15
பிப்
2014
10:02
ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவிற்காக சுகாதாரப்பணி, மற்றும் அவசர கால மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியை சிறப்புக்குழு மேற்கொள்ளும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள சாக்கடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குப்பைகளை அப்புறப்படுத்தி ஈக்களை ஒழிக்க மருந்து அடிக்கும்படி, பேரூராட்சியிடம் சுகாதார துறையினர் கேட்டு உள்ளனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: திருவிழா நாட்களில் மட்டுமே வைக்கப்படும் உணவுக்கடைகள், தின்பண்டக்கடைகள், சுற்றுப்பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளவும், சுகாதாரத்தை கண்காணிக்கவும் சிறப்பு பணியாளர்கள் அமர்த்தபடுவர்.அவசர கால தேவைக்காக முக்கோணம் பகுதி, மாசாணியம்மன் கோவில், மற்றும் குண்டம் பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும் . கோவில் மற்றும் முக்கோணம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குண்டம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன் புதூர் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக ஒரு மருத்துவர், நான்கு மருத்துவப்பணியாளர்கள், ஒரு டிரைவர் என ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.