பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
02:04
பள்ளிப்பட்டு: தெய்வானை வள்ளி உடனுறை கஜகிரி செங்கல்வராய சுவாமிக்கு, குதிரை வாகனம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு அடுத்த, நெடியம் அருகே உள்ளது, கஜகிரி செல்வராயன் மலைக்கோவில். யானை படுத்திருப்பது போன்ற சிறப்பு தோற்றம் கொண்டது இந்த மலை. மலை உச்சியில், விஸ்தீரமான பரப்பில் குளங்களுக்கு மத்தியில் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோரும் பங்குனி உத்திரம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த, ௩௦ ஆண்டுகளுக்கு முன், சுவாமியின் குதிரை வாகனம் காணாமல் போய்விட்டது. இதனால், மனவேதனையில் இருந்த பக்தர்கள், நேற்று முன்தினம் புதிய குதிரை வாகனத்தை, பங்குனி உத்திர திருநாளில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்தனர். முன்னதாக, வாகனம், கொளத்துார், வெங்கம்பேட்டை, நெடியம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மாலை ௬:௦௦ மணியளவில், மலைக்கோவிலில், தெய்வானை, வள்ளி உடனுறை செங்கல்வராய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் குதிரை வாகனத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.