பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
12:04
கோவை : கோவை மாவட்ட ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மூன்றாவது ஆண்டு ஆராதனை மகோத்ஸவ நிகழ்ச்சி, கோவையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சாய்பாபாகோவில் சாய்தீப் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீராமனும், சாயி ராமனும் என்ற சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சத்யசாய் சேவா நிறுவன மாவட்ட ஆன்மிக பொறுப்பாளர் ராம்ஜி, பஜனை நடத்தி பேசியதாவது:மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வெளிப்படுத்துவது ராமாவதாரம். சாய்பாபாவுக்கும் ராமாதாரத்துக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. ராமநாமத்தை மூன்று முறை சொன்னால், எல்லா பாவமும் போய்விடும். இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும், அசைவும் பகவானால் திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு செயலையும், நான் செய்கிறேன் என மனிதர்கள் சொல்வதில் ஒன்றுமில்லை. நான் என்ற அகந்தையை, கெட்ட குணங்களை அகற்ற வேண்டும் என்கிறார் சாய்பாபா.இதயத்தின் ஆழத்தில் இருந்து, பகவானை நினைத்தால், நம்மை சூழ்ந்துள்ள துன்பங்கள் போய்விடும். மனதில் எழுவதை பேச வேண்டும்; பேசுவதை செயல்படுத்த வேண்டும். இந்த கலியுகத்தில் மனதை அடக்க, ராமநாமம், சாய்நாமத்தை தினந்தோறும் துதிக்க வேண்டும். இவ்வாறு ராம்ஜி பேசினார்.ஆராதனை நிகழ்ச்சி தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில் இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.