Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேன உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம்! ஆன்மாவைத் தேடு!
முதல் பக்கம் » கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
சாந்தி மந்திரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
04:04

எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போது மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

கேன உபநிஷத்திற்கு இரண்டு சாந்தி மந்திரங்கள் உள்ளன.
    1
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ- நம் இருவரையும்; அவது- காப்பாராக; ஸஹ நௌ- நம் இருவரையும்; புனக்து- அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ- சேர்ந்து; வீர்யம்- ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை- உழைப்போமாக; அதீதம்- கற்றது; நௌ- நமக்கு; தேஜஸ்வி- பயனுள்ளதாக; அஸ்து- விளங்கட்டும்; மா வித்விஷாவஹை- வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர்! சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

    2

ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷú: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம் ப்ரஹ்மௌப- நிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் மேஸஸ்து ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

மம- எனது; அங்கானி- அவயவங்களான; வாக்- வாக்கு; ப்ராண:- பிராணன்; சக்ஷú: - கண்கள்; ச்ரோத்ரம்- காதுகள்; அதஉ- மற்றும்; ஸர்வாணி- எல்லா; இந்த்ரியாணி ச- புலன்களும்; பலம் ஆப்யாயந்து- மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும்; ஒளபநிஷதம்- உபநிஷதங்கள் கூறுகின்ற; ப்ரஹ்ம- இறைவனே; ஸர்வம்- எல்லாம்; ப்ரஹ்ம- இறைவனை; அஹம்- நான்; மா- நிராகுர்யாம்- மறுக்கா திருப்பேனாக; ப்ரஹ்ம- இறைவன்; மா- என்னை; மா நிராகரோத்- மறுக்காதிருப்பாராக; அனிராகரணம் அஸ்து- மறுப்பு இல்லாதிருக்கட்டும்; மே- என்னிடமிருந்து; அனிராகரணம் அஸ்து- மறுப்பு இல்லாதிருக்கட்டும்; தத் ஆத்மனி- அந்த ஆன்மாவை; நிரதே- நாடுகின்ற; மயி- எனக்கு; யே தர்மா; - எந்த தர்மங்கள்; உபநிஷத்ஸு- உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளனவோ; தே-அவை;மயி- என்னில்; ஸந்து- குடிகொள்ளட்டும்.

எனது அவயவங்களான வாக்கு, பிராணன், கண்கள், காதுகள், மற்றும் எல்லா புலன்களும் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற இறைவனே எல்லாம். அந்த இறைவனை நான் மறுக்காதிருப்பேனாக. இறைவன் என்னை மறுக்காதிருப்பாராக. இறைவனிடமிருந்தும் மறுப்பு இல்லா- திருக்கட்டும். என்னிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும், உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடிகொள்ளட்டும்!

எதையும் சாதிப்பதற்கு உறுதியான உடலும் திடமான மனமும் வேண்டும். இரண்டையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

மூன்று விதமான  தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக ஓம் சாந்தி: சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்று தடைகள் வருமாறு:

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபபவை.

கேன உபநிஷதம் எல்லாம் யாரால்?

எல்லாம் யாரால்? இவை எல்லாம் யாரால்? உடல், மனம், பிராணன் போன்றவை செயல்படுவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

யாரால் எல்லாம் இயங்குகின்றன? : 1-2

ஓம் கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:
கேன ப்ராண: ப்ரதம: ப்ரைதி யுக்த:
கேனேஷிதம் வாசமிமாம் வதந்தி
சக்ஷú: ச்ரோத்ரம் க உ தேவோ யுனக்தி (1)

கேன- எதனால்; ஈஷிதம்- விரும்பப்பட்டு; ப்ரேஷிதம் - ஏவப்பட்டு; மன; பததி- செல்கிறது; கேன- எதனால்; ப்ரதம:- முக்கிய; ப்ராண- பிராணன்; யுக்த:- செலுத்தப்பட்டு; ப்ரைதி- செல்கிறது; கேன- எதனால்; இமாம்- இந்த; வாசம்- வாக்கு; வதந்தி- பேசுகிறது; சக்ஷú:- கண்; ச்ரோத்ரம்- காது; கஉ- எந்த; தேவ:- தேவன்; யுனக்தி- செலுத்துகிறான்.

1. ஏவப்பட்ட மனம் யாருடைய விருப்பத்தால் செல்கிறது? முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப்படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்?

மனம் என்ற ஒன்று இருப்பதை நாம் அறிவோம். நாம் அறிந்தவற்றுள் விரைவானது மனம். அதற்கு இந்த வேகத்தைக் கொடுத்தது யார்?

பிராணன். எங்கும்  நிறைந்து உலகை இயக்குகின்ற ஆற்றலே பிராணன். அந்தப் பிராணனின் ஓர் அம்சம் நம்மிலும் செயல்படுகிறது. நமது உடல், அதன் இயக்கங்கள், மனம், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பிராணன் என்கின்ற ஆற்றலினாலேயே செயல்படுகின்றன. இந்தப் பிராணனை இயக்குவது யார்?

வாக்கு எதனால் ஏவப்பட்டு இயங்குகிறது?

கண், காது என்ற இரண்டு பெயர்களின் மூலம் அனைத்து புலன்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. புலன்கள் யாரால் செயல்படுகின்றன?

உடம்பும் மனமும் புலன்களும் பிராணனும் எல்லாம் இயங்குவது யாரால் என்பது கேள்வி.

ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண:
சக்ஷúஷச்சக்ஷúரதிமுச்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி (2)

யத்- அந்த; ச்ரோத்ரஸ்ய- காதின்; ச்ரோத்ரம்- காது; மனஸ:- மனத்தின்; மன:- மனம்; வாச:- வாக்கின்; வாசம்- வாக்கு; ப்ராணஸ்ய- பிராணனின்; ப்ராண:- பிராணன்; சக்ஷúஷ:- கண்ணின்; சக்ஷú:- விழிக்கப் பெற்றவன்; அதிமுச்ய- விட்டு; அஸ்மாத்- இந்த; லோகாத்- உலகிலிருந்து; ப்ரேத்ய- விலகி; அம்ருதா:- மரணமற்ற நிலையை; பவந்தி- அடைகிறான்.

2. காதின் காதாக, மனத்தின் மனமாக, வாக்கின் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது  ஆன்மா. உணர்வு விழிக்கப் பெற்றவன் இந்த உண்மையை உணர்ந்து, புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.

முந்தின மந்திரத்தில் உடம்பும் மனமும் எல்லாம் யாரால் இயங்குகின்றன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆன்மா என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.

உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். உடம்பின் செயல்பாடுகளோ, அது இயங்கும் முறையோ  பொதுவாக நமக்குத் தெரியாது என்றாலும் உடம்பு ஒன்று இருப்பதை நாம் அறிவோம்.

உடம்பிற்குப் பின்னால் மனம் ஒன்று இருப்பதையும் அறிந்துகொள்ள முடியும். உடம்பு வெறும் கருவி மட்டுமே. அதனை இயக்கிக் கொண்டிருப்பது மனம். இந்த மனம் எங்கே இருக்கிறது, எதனால் ஆனது, எப்படி இயங்குகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அது உடம்பை இயக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. காது, கண் போன்ற புலன்கள் அதன் வாசல்கள் ஆகும். இந்த வாசல்களின் வழியாக மனம் புற உலகுடன் தொடர்பு கொள்கிறது, அனுபவங்களைப் பெறுகிறது.

மனம் சுதந்திரமானதா, அல்லது, மனத்திற்குப் பின்னால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, அதுவே மனத்தையும் உடம்பையும் இயக்குகிறது என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.

புற உருவங்களைக் கண் பார்க்கிறது. கண்ணை மனம் பார்க்கிறது. மனத்தில் எழுகின்ற எண்ண அலைகளை ஆன்மா காண்கிறது. ஆன்மாவே காண்பவன். ஆன்மாவை யாரும் காண இயலாது என்கிறது த்ருக் த்ருச்ய விவேகம்.

எனவே மனத்தையோ அதன் செயல்பாடுகளையோ நாடிப் பயனில்லை என்பதை விழிப்புணர்வு பெற்றவன் அறிந்துகொள்கிறான்; ஆன்மாவை நாடுகிறான்.

ஆன்மாவை நாடுவதன் பலன் என்ன? மரணமற்ற நிலை.

(ஆன்மா (3-9)

உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. தானாக நிற்கும் இது எங்கும் நிறைந்தது, ஏனெனில் இதற்கு உருவம் இல்லை என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். நமது வாழ்க்கையை

1. ரூபம் த்ருச்யம் லோசனம் தத் த்ருச்யம் த்ருக் து மானஸம்
த்ருச்யா தீவ்ருத்தய: ஸாக்ஷீ த்ருகேவ ந து த்ருச்யதே
    த்ருக் த்ருச்ய விவேகம்.

2. ஞான தீபம், 3.56-57.

இயக்கியபடி, நமது உடல்-மனச் சேர்க்கைக்குப் பின்னால் இருப்பது ஆன்மா (2). அந்த ஆன்மா எத்தகையது? அதனை 3-9 மந்திரங்கள் கூறுகின்றன.

ஆன்மா: விளக்க இயலாதது:

ந தத்ர சக்ஷúர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைததனுசிஷ்யாத் (3)

தத்ர- அங்கே; சக்ஷú:- கண்; ந கச்சதி- செல்வதில்லை; வாக்- வாக்கு; மன;- மனம்; ந உ- செல்வதில்லை; ந வித்ம: - எங்களுக்குத் தெரியாது; ஏதத்- இதனை; யதா- எப்படி; அனுசிஷ்யாத்- புரியவைப்பது; ந விஜானீம:- தெரியாது.

3. அங்கே கண் செல்வதில்லை; வாக்கு மனமும்
செல்வதில்லை. எனவே அது எத்தகையது என்பது
எங்களுக்குத் தெரியாது. அதனை எப்படி பிறருக்குப்
புரிய வைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியாது.

தொலைநோக்கியால் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க முடியும்; ஒன்றைப் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் அருகிலுள்ளதைப் பார்க்க முடியும்; தொலைவிலுள்ளதைப் பார்க்க முடியாது. துரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தொலை நோக்கி. அருகில் உள்ளவற்றைப் பெரிதாகக் காண்பதற்காக உருவாக்கப்பட்டது நுண்ணோக்கி. ஒன்றின் பணியை மற்றொன்று செய்ய இயலாது. அதுபோலவே புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காக உள்ளவை; அவற்றால்

1. பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:
தஸ்மாத் பராங் பச்யதி நாந்தராத்மன்
    - கட உபநிஷதம், 2.1.1.

அகத்திலுள்ள எதையும் காணவோ அறியவோ இயலாது என்று கட உபநிஷதம் கூறுகிறது.

புலன்களால் அனுபவிக்க இயலாத ஒன்றை எப்படி புலன்களால் விளக்க முடியும்? எனவேதான், தர்ம ஆன்ம அனுபூதி பெற்றவராக இருந்தும் தம்மால் அதனை விளக்க இயலவில்லை என்று பணிவுடன் கூறுகிறார் உபநிஷத முனிவர்.

ஆன்மா: அறிய முடியாதது:

அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி
இதி சுச்ரும பூர்வேஷாம் யே நஸ்தத் வ்யாசசக்ஷிரே (4)

தத்- அது; விதிதாத்- அறிந்தவற்றிலிருந்து; அன்யத் ஏவ- வேறுபட்டது; அதோ- மேலும்; அவிதிதாத்- அறியாதவற்றிலிருந்து; அதி- மேலானது; யே- யார்; ந:- எங்களுக்கு; தத்- அதை; வ்யாசசக்ஷிரே- விளக்கினார்களோ; பூர்வேஷாம்- முன்னோர்களிடமிருந்து; இதி- இவ்வாறு; சுச்ரும- கேள்விப்பட்டிருக்கிறோம்.


4. அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறு பட்டது; அறியாதவற்றைவிட மேலானது. எங்களுக்கு அதைப்பற்றி விளக்கிய முன்னோர்களிடமிருந்து நாங்கள் இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம்.

உலகில் நாம் அறியாதவை எவ்வளவோ உள்ளன. உயிரினங்களிலும் நாம் அறிந்தது மிகமிகச் சொற்பமே. ஆயினும், உலகமும் உயிர்களும் நாம் அறிந்தவை. அதாவது, அவை இருப்பது நமக்குத் தெரியும். அவை ஆன்மா அல்ல. இனி, நாம் அறியாத உலகங்கள் எவ்வளவோ உள்ளன. இப்படி நாம் அறியாதவற்றை ஆன்மா என்று கூறலாமா? இல்லை ஏனெனில் அறியாதவற்றை ஒருநாள் அறிந்துவிட முடியும். எனவே அவையும் ஆன்மா அல்ல.

அறிந்தவையும் ஆன்மா அல்ல. அறியாதவையும் ஆன்மா அல்ல. இதன் பொருள் என்ன? ஆன்மா அறியப்பட முடியாதது. உலகப் பொருட்களைப்போல் ஆன்மாவை அறிய முடியாது. இந்தக் கருத்து 2: 1-3- இல் விளக்கப்படுகிறது.

ஆன்மா: அனைத்துச் செயல்களுக்கும் ஆதாரம்: 5-9

யத் வாசானப்யுதிதம் யேன வாகப்யுத்யதே
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே (5)

யத்- எது; வாசா- வாக்கினால்; அனப்யுதிதம்- விளக்கப்பட முடியாதோ; யேன- எதனால்; வாக்- வாக்கு; அப்யுத்யதே- விளக்கம் பெறுகிறதோ; தத் ஏவ- அதுவே; ப்ரஹ்ம- ஆன்மா; த்வம்- நீ; வித்தி- அறி; யத்- எது; இதம்- இங்கே; உபாஸதே- வழிபடுகிறார்களோ; இதம்- இது; ந- அல்ல.

5. எது வாக்கினால் விளக்கப்பட முடியாதோ,
எதனால் வாக்கு விளக்கம் பெறுகிறதோ அதுவே
ஆன்மா. இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா
அல்ல என்பதை அறிந்துகொள்.

யன்மனஸா ந மனுதே யேனாஹுர்மனோ மதம்
ததேவ ப்ரஹ்ம த்வம் நேதம் யதிதமுபாஸதே


யத்- எது; மனஸா- மனத்தால்; ந மனுதே- அறியப் பட முடியாதோ; யேன- எதனால்; மன;- மனம்; மதம்- அறியப்படுகிறதோ; அஹு:- சொல்கிறார்கள்.

6. எது மனத்தால் அறியப்பட முடியாதோ, எதனால்
மனம் அறியப்படுகிறதோ அதுவே ஆன்மா என்று
சான்றோர்கள் கூறுகிறார்கள். இங்கே வழிபடப்படு
கின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.

யச்சக்ஷúஷா ந பச்யதி யேன சக்ஷüம்ஷி பச்யதி
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே

யத்- எது; சக்ஷúஷா- கண்ணால்; ந பச்யதி- பார்க்கப்படுவதில்லையோ; யேன- எதனால்; சக்ஷüம்ஷி- கண்கள்; பச்யதி- பார்க்கின்றனவோ.

7. எது கண்களால் பார்க்கப்படுவதில்லையோ,
எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே ஆன்மா
இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல
என்பதை அறிந்துகொள்.

யச்ச்ரோத்ரேண ந ச்ருணோதி யேன ச்ரோத்ரமிதம் ச்ருதம்
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே (8)

யத்- எது; ச்ரோத்ரோண- காதுகளால்; ந ச்ருணோதி- கேட்கப்படுவதில்லையோ; யேன- எதனால்; இதம்- இந்த; ச்ரோத்ரம்- கேட்பவை; ச்ருதம்- கேட்கப்படுகின்றனவோ.

8. எது காதுகளால் கேட்கப்படுவதில்லையோ.
எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுவே ஆன்மா.
இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல
என்பதை அறிந்துகொள்.

யத்ப்ராணேன ந ப்ராணிதி யேன ப்ராண: ப்ரணீயதே
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே (9)

யத்- எது; ப்ராணேன- மூச்சினால்; ந ப்ராணிதி- முகரப்படுவதில்லையோ; யேன- எதனால்; ப்ராண;-மூச்சு; ப்ரணீயதே- முகர்கின்றதோ.

9. எது மூச்சினால் முசுரப்படுவதில்லையோ, எத
னால் மூச்சு முகர்கின்றதோ அதுவே ஆன்மா. இங்கே
வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை
அறிந்துகொள்.

ஒளி இருப்பதால் பொருட்கள் விளக்கம் பெறுகின்றன. ஆனால் பொருட்களால் ஒளி விளக்கம் பெறுவதில்லை. அதுபோல் ஆன்மா இருப்பதால் அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. ஆனால் செயல்களைச் செய்கின்ற கருவிகளால் ஆன்மாவை அறிய இயலாது.

இந்த 5 மந்திரங்களிலும் ஒரே வரி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அதன்மூலம் அந்தக் கருத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. நாம் இங்கே வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதே அந்தக் கருத்து.

ஆன்மா என்பது எது? இறைவனே. எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக விளங்குகிறார். இறைவன், கடவுள், தெய்வம் என்றதும் நம் நினைவுக்கு வருபவை கோயிலும் தெய்வங்களுமே, சாதாரண மனிதனின் ஆன்மீகம் கோயிலையும் தெய்வ வழிபாட்டையும் சார்ந்தே உள்ளது.அவை ஆன்மா அல்ல, அதாவது இறைவன் அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.

கோயிலிலுள்ள விக்கிரகங்கள் கல்லினாலும் செம்பினாலும் ஆனவை. வீட்டிலுள்ள பூஜையறையில் நாம் வழிபடுகின்ற தெய்வங்கள் காகிதத்தாலும் மையாலும் ஆனவை. கல்லும் செம்பும் காகிதமும் மையும் கடவுள் அல்ல என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படியானால் ஏன் வழிபடுகிறோம்? இந்தக் கல்லும் செம்பும் நம்மில் இருக்கின்ற ஆன்மாவைக் காண்பதற்கான ஒரு படி என்பதால்.

வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காண்பதற்கு படிப்படியான வழியைக் கையாள்கிறோம். முதலில் ஒரு மரம், மரத்தின் கிளை, கிளை வழியே தெரிகின்ற பிரகாசமான நட்சத்திரம், அதன் அருகில் நாம் பார்க்க வேண்டிய நட்சத்திரம் என்று படிப்படியாக் காணும்போது விரைவில் அதுபோலவே எங்கும் நிறைந்த இறைவனைச் சட்டென்று அகத்தில் காண வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல. எனவே முதலில் புறத்தில் ஒரு விக்கிரகத்தில், ஒரு  படத்தில் அவரைக் காண முயற்சிக்கிறோம். ஆன்மாவாக நம்மில் புறத்தில் செய்கின்ற வழிபாடு என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். புறத்தில் தேடி காண முடியாத இறைவனைக் கடைசியாக அகத்தில் தேடி அங்கே கண்டதாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்:

தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடி தேடொணா தேவனை என்னுள்ளே
    தேடிக் கண்டு கொண்டேன்.

எனவே நாம் வழிபடுகின்ற விக்கிரகங்களும் படங்களும் உண்மை இறையனுபவத்திற்கான ஒரு படி மட்டுமே,

அவை அறுதி நிலை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மந்திரங்கள் அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

இதி கேனோபநிஷதி ப்ரதம: கண்ட:

 
மேலும் கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?) »
temple news
வேதங்கள்!உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 

ஆன்மாவைத் தேடு! ஏப்ரல் 26,2014

நாம் வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல (1:5-9) என்ற கருத்து இங்கே தொடர்கிறது. ஒரு விக்கிரகத்தை வழிபடுவதுடன் ... மேலும்
 
இந்தக் கதையில் வரும் அக்கினி, வாயு முதலான தேவர்கள் புலன்களுக்கும், தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் ... மேலும்
 

மந்திரங்கள்! ஏப்ரல் 26,2014

சாந்தி மந்திரங்கள்:ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம்கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar