பதிவு செய்த நாள்
21
மே
2014
11:05
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமத்தில், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. அன்றிரவு அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 13ம் தேதி சிம்ம வாகனம், 14ம் தேதி அனுமந்த வாகனம், 15ம் தேதி நாக வாகனம், 16ம் தேதி கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 17ம் தேதி காலையில் திருக்கல்யாணம், மாலை வசந்த உற்சவமும், 18ம் தேதி சோம சூரிய பிரபையும், நேற்று குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:16 மணிக்கு தேரோட்டம் நடந்தது. குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ஞானமூர்த்தி, ஜெ., பேரவை ஒன்றிய இணை செயலாளர் சம்பத் ஐயர், ஒன்றிய கவுன்சிலர்கள் தீபாராஜாமணி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மட்டையடி சப்தாவரணம், 22ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.