பதிவு செய்த நாள்
27
மே
2014
12:05
செவ்வாய்க்கிழமை என்றாலே, ஏதோ வேண்டா வெறுப்பாக ஒதுக்கப்படும் நாளாகக் கருதுகின்றனர். உண்மையில், இது ஒரு புண்ணியக்கிழமை. அதிலும், செவ்வாய்க்கிழமையும், தேய்பிறை சதுர்த்தசி திதியும் சேர்ந்தால், அது சாபங்களைத் தொலைக்கும் நன்னாளாக அமையும். இந்த நாளை, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி என்பர். கிருஷ்ண என்றால், தேய்பிறை. அங்காரகன் என்றால், செவ்வாய். கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவபெருமானின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக, வானமண்டலத்தில் இடம் பெற்றுள்ளதாக மச்சபுராணம் கூறுகிறது. தட்சன், தன் மகள் தாட்சாயணியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு சமயம், யாகம் ஒன்றை நடத்திய தட்சன், விரோதம் காரணமாக சிவனை யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால், மற்ற தேவர்கள் யாகத்திற்கு சென்றனர். கோபமடைந்த சிவன், யாகத்தில் பங்கேற்ற தேவர்களை அழிக்க, தன் கண்ணில் இருந்து அக்னி வீரபத்திரர் என்பவரை உருவாக்கி, அனுப்பி வைத்தார். அவரைப் பார்த்த சுக்ராச்சாரியார் பணிந்து, உயிர்பிச்சை தரும்படி கேட்டார். வீரபத்திரர் அவரை விட்டு விட்டார். மற்றவர்களை அழித்தார். தேவர்கள் அவரைச் சாந்தப்படுத்தினர். பின்பு, சுக்ராச்சாரியாரும், மற்றவர்களும் அவரை செவ்வாய் கோளாக இருக்கும்படி வேண்டினர். ஆங்காரம்(கோபம்) தணிந்த அவர், அங்காரகன் ஆனார்.
மற்றொரு வரலாற்றின்படி, இவர் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த திரவத்தில் இருந்து பிறந்தவர் என்பர். சிவந்த இந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்தாள். அதனால் தான் இவர், பூமிகாரகன் எனப்படுகிறார். நிலம் வாங்க விரும்புவோருக்கு, ஜாதகத்தில் செவ்வாய் பலம் வேண்டும் என்பர். செவ்வாயை வழிபட ஏற்ற நாள், கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. நம் குடும்பங்களுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் சாபங்களால், நிம்மதி குலைந்து போகும். அகால மரணங்கள் நிகழும். இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர, இந்நாளில் பிதுர் தேவதைகளை வணங்குவதுடன், கடல், ஆற்றங்கரையோர தலங்களுக்கு சென்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த சாபங்கள் தீர்வதற்கென்றே உள்ள ஹோமங்களை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது. இந்நாளில், குலதெய்வ வழிபாடும் மிக முக்கியம். தெய்வத்தன்மையுள்ள கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி, மிக அபூர்வமாகவே வரும். இந்த நாளை தவற விடாமல், நம் பாவங்கள் தொலைவதற்கான பரிகாரங்களைச் செய்து வருவோம்.