சிவபெருமானின் யோக வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம். யோகம், ஞானம் அருளும் இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, வியாக்கியான தட்சிணாமூர்த்தி என்று நான்கு வடிவங்களாக விவரிக்கின்றன ஞானநூல்கள். இதில், தும்புரு, நாரதர், சுகர் ஆகியோருக்கு வீணையின் நுட்பங்களை வாசித்துக்காட்டியது, வீணாதர தட்சிணாமூர்த்தி என்கின்றன புராணங்கள். வீணையுடன் தட்சிணாமூர்த்தி அருளும் திருத்தலங்கள் பல உண்டு. மைசூரில் உள்ள நஞ்சன்கூடு- நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் வீணையுடன் அருளும் தட்சிணா மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில், கையில் வீணையுடன் காட்சித் தருகிறார். திருப்பூந்துருத்தி திருக்கோயிலிலும் வீணையுடன் அருளும் தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள வெட்டுவான் கோவிலில் மிருதங்கம் ஏந்திய தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். திருவிடை மருதூரில் உமையம்மையுடன் கூடிய தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.