வனவாசத்தில் ஸ்ரீராமர் தமக்கு உதவி செய்தவர்களை குகனோடு- ஐவர், சுக்ரீவனோடு- ஆறுவர், விபீஷ்னோடு- எழுவர் என்று கூறுகிறார். ஆனால் விபீஷணன் ராமனுடன் சேரு முன்னரே, அனுமன் அவருக்குப் பேருதவி புரிகிறான். சீதையைத் தேடக் கடலைத் தாண்டியது, சீதையைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க சமயத்தில் கணையாழியைக் கொடுத்து அவள் உயிரைக் காப்பாற்றியது, அவளிடமிருந்து சூடாமணி பெற்று வந்து ஸ்ரீராமரிடம் நற்செய்தி சொன்னது என்று, ஆனால், அனுமனோடு- எழுவரானோம் என்று ஏன் ராமன் சொல்லவில்லை? என்ன காரணம்? மற்ற மூவரும் அந்தந்தப் பகுதிக்கு அரசர்கள் என்ற வேற்றுமை பாராட்டுபவர் அல்லர் ஸ்ரீராமர். உத்தம சேவகர்கள், தம் எஜமானன் சொன்ன காரியத்தைக் குறைவின்றி செய்து முடித்துவிட்டு வருவார்கள். அத்தகைய சேவகனான அனுமன் செய்த உதவிக்கு இணையாகக் கொடுக்க, தம்மிடம் ஒன்றும் இல்லையே என்று யோசனை செய்து, முடிவில், என்னையே இவனுக்குக் கொடுப்பேன் என்று அனுமனைத் தழுவிக்கொள்கிறார். அதனால்தான் அனுமன் ராமருக்கு ஒப்பாகிறார். எனவேதான், அனுமனுக்குக் கோயில் கட்டி, வழிபடுகிறோம். மற்ற சகோதரர் மூவரில் ஒருவருக்கும் கோயில் இல்லை!