பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
12:06
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரகத் சுந்தரகுஜாம்பிகை உடனாய மகாலிங்கப்பெருமான் கோவில் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரத்திற்கென்று தனித்தனி சிவலிங்கம் அமைந்துள்ளது. இங்கு, உமையம்மையார் அருந்தவமிருந்து மகாலிங்கப்பெருமான் அருவுருவ காட்சியை அகத்தியர் முதலிய முனிவர்கள் கண்டு வழிபடும் பேற்றினை வழங்கினார். அகத்திய மாமுனிவர் வேண்டுகோளின்படி, வைகாசி மாதம் உத்திர நன்னாளில், அன்னையை திருமணம் கொண்டருளினார். பிற்காலத்தில் மாந்தாதா என்ற மன்னர், இங்கு திருப்பணிகள் பல செய்து, திருக்கல்யாண திருவிழா நடத்தியதாக புராணம் கூறுகிறது. கடந்த, 2ம் தேதி வைகாசி விசாக திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. அன்று முதல், தினமும் இரவு, ஸ்வாமி முத்து விமானத்தில் திருச்சுற்று பவனி நடைபெற்று வருகிறது. கடந்த, 7ம் தேதி இரவு, 8.30 மணிக்கு மகாலிங்கபெருமானுக்கும் பிரகத்சுந்தர குஜாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு, 10 மணிக்கு முத்து விமானத்தில், திருச்சுற்று பவனி நடைபெற்றது.