பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
03:06
அன்புமயமாக இருப்பவர் கடவுள். அவரின் அருளைப் பெற விரும்பினால், இதயம் முழுவதையும் அன்பால் நிரப்புங்கள். எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோயில். ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு. பகைவனிடமும் அன்பு செலுத்தக் கற்றுக் கொண்டால் எதிரியே இல்லாமல் போய் விடுவார்கள். அதனால், பகைவனையும் அன்பால் வெல்லுங்கள். தீயவழியில் செல்வது மனதின் இயல்பு. அதைக் கட்டுப்படுத்தி குழந்தைகளைப் போல நற்பண்புகளுடன் வாழ்வதே நன்னடத்தை. கல்வி மனிதனுக்கு கண்போன்றது. ஆனால், ஒழுக்கமோ உயிர் போன்றது. கண்ணில்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால், உயிர் இல்லாமல் வாழ முடியாது. கல்விக்கு அழகு பணிவுடன் இருப்பதே. அடக்கமும் பணிவும் கற்றுத் தராத கல்வி சிறிதும் பயன் அளிக்காது. நல்லொழுக்கத்துடன் வாழ்வது கடவுளிடம் தோழமை கொள்வதற்கு இணையானது. அந்த பாதையில் செல்பவன் கடவுளைச் சென்றடைவான். செல்வந்தர் பணத்தால் சேவை செய்ய வேண்டும். ஏழைகள் உடல் உழைப்பால் மற்றவருக்கு சேவை செய்ய முயல வேண்டும். பிறருக்கு கொடுத்து உதவுவதே உண்மையான மகிழ்ச்சி. செல்வ நிலைக்கு மட்டுமில்லாமல் பதவி, அதிகாரம், திறமை போன்றவற்றிற்கும் இது பொருந்தும். உள்ளத்தில் அழுக்கு என்பதே இல்லாமல் இருப்பதே சிறந்த அறம் என்கிறார் திருவள்ளுவர். மனத்துõய்மையுடன் வாழ்வதே சிறந்த தர்மம். பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’ என்று சொல்வார்கள். இந்த மனித உடல் பிறருக்கு நன்மை செய்வதற்காகவே அமைந்துள்ளது என்பது இதன் பொருள். குடியிருக்கும் வாடகை வீட்டுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம் உள்ளதோ, அது தான் இந்த உலகத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பு.
உலகத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானதல்ல. வெறுமனே உண்பது, உறங்குவது இது இரண்டு மட்டுமே வாழ்க்கையல்ல. உன்னதமான லட்சியத்தை முன்னிறுத்தி அதற்காகவே தன்னை அர்ப்பணிப்பதே உயர்ந்த வாழ்வு. நீங்கள் எதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்களோ, அதற்குரிய வாழ்வும், பதவியும் உங்கள் வீட்டுக் கதவை வந்து நிச்சயம் தட்டும். மனிதர்கள் அனைவரும் தமது கடமை, பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் வீடு மட்டுமல்ல நாடும் சிறப்பு நிலை அடையும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம், பணம் சம்பாதிக்கலாம் என்று இன்றைய இளைய சமுதாயம் நினைப்பது தர்மம் ஆகாது. தன்னலத்துக்காக பிறர் நலத்திற்கு தீங்கு நினைப்பது கூடாது. முன்னோர்கள் வகுத்து அளித்த அறவழியில் வாழ்வு நடத்துங்கள். சுயநலம், பேராசை போன்ற தீய குணங்கள் மனிதனைப் பாவம் செய்ய துõண்டுகின்றன. விவேகம், விடாமுயற்சி, தெய்வபக்தி கொண்டவர்களால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். கடவுள் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருந்தால் நம் மனம் பாவத்தில் ஒருபோதும் ஈடுபடாது. வாழ்க்கை என்பது கோயிலைப் போன்றது. அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது அக்கோயிலைக் கட்டுங்கள். மரம் நமக்கு நிழல், பூ,காய், கனி என அனைத்தையும் அளித்து மகிழ்வது போல, நாமும் பிறருக்கு பயனுள்ளவர்களாக வாழ முயல வேண்டும்.