பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
12:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 30ம் தேதி உள்ளூர் விடுமுறை விட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான ஜூலை30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கார் பார்க்கிங் வசதி, ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. திருவிழாகாலங்களில் கோயிலுக்கு தடையில்லா மின்சார வழங்கவும், தேரோட்டம் நடப்பதற்கு வசதியாக நான்கு ரதவீதிகளில் ஆக்ரமிப்புகளும், மரக்கிளைகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவக்குழு, தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. தேரோட்ட தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதிக்க கூடாது என்பதுட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் ஜூலை 22ம் தேதி இது தொடர்பாக கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, , மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கதிரேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மின்வாரிய செயற்பொறியாளர் பழனிவேல், தாசில்தார் ஜெயந்தி, கோயில் செயல் அலுவலர் ராமராஜா, அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.