சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2014 03:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடனமாடி வந்த நடராஜர் சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் மாலை 6 மணிக்கு கீழ சன்னதியில் நிலைக்கு வந்தது. 8 மணிக்கு சுவாமி தேரில் இருந்து புறப்பாடு செய்து ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். இதில் ஆயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சுவாமி, அம்பாள் ஆயிரங்கால் உள்மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனை வி.ஐ.பி.,க்கள் மற்றும் கட்டளைதாரர் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜைகள் நடந்தது. 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து 1.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார்.
மதியம் 2.20 மணிக்கு மேளதாலங்களுடன், தேவாராம் பன்னிரு திருமுறை பாட, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் முன் மண்டபத்தில் ஆனந்த நடனமாடி வரும் ஆனித்திருமஞ்சனம் மகா தரிசனம் கண்கொள்ளாக் காட்சி நடந்தது. இதில் லட்கனக்கான பக்தர்கள் “சிரசுக்கு மேல் கை கூப்பி வணங்கி கைளை தட்டி ஓசைகள் எழுப்பியும், தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே” என கோஷம் எழுப்பி பக்தர்களும் ஆனந்த நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமி 21 படி வாசல் வழியாக சித்சபை பிரவேசம் செய்தார். சித்சபை முன்பு தீட்சிதர்கள், சுவாமியை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். நடராஜர் சுவாமி தரிசனம் உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.