பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
விநாயகரின் ஏராளமான திருநாமங்களில் அபூர்வமானது, அங்கோல கணபதி என்கிற திருநாமம். என்ன பொருள் இதற்கு? தமிழில் ஏறழிஞ்சில் என்று பெயர். அதன் கீழ் அமர்ந்த பிள்ளையார் என்பதால் அங்கோல கணபதி. சரி, என்ன சிறப்பு அந்த மரத்துக்கு? இந்த மரத்திலிருந்து விழும் பழங்கள் இளம் சிவப்பாக உள்ளன. ஓரிரு நாட்களில் இவை தாமாகவே மரத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இப்படி ஒட்டிக்கொண்ட காய்களை இன்றும் நாம் பார்க்கலாம். இங்கு கீழே விழுந்த பழங்களையும் நாம் பார்க்கலாம். எப்பொழுது, எப்படி மரத்தின் மீது ஒட்டிக் கொண்டது என்பதை யாரும் பார்த்ததில்லை என்கிறார் அர்ச்சகர். இம்மரத்தின் வயது 2,500 வருடங்களுக்கு மேல், இதன் இலைகள், மரப்பட்டைகள் பலவித விஷக்கடிகளுக்கு மருந்தாக உபயோகப்படுகிறது. அபூர்வமான இந்த மரத்தின்கீழ் எழுந்தருளியுள்ள விநாயகரை நாம் தரிசிப்பது, சின்னக் காவனத்தில் உள்ள நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்துக்கு முன்னால்! அழகிய மேடையில் சுயம்புவாக அருள்பாலிக்கிறார் விநாயகப் பெருமான். இவரைத் தரிசித்துவிட்டே சிவபிரானை வழிபட வேண்டும் என்பது இங்கு காணும் மரபு. அழகிய ராஜ கோபுரத்துடன் கூடிய திருக்கோயில்.
அங்கோல கணபதியைத் தரிசித்துவிட்டு நூற்றெட்டீஸ்வரர் ஆலயத்தினுள் நுழைகிறோம். முதலில் சதுர்வேத புரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிறகு அருள்மிகு சிவகாமி அம்மனையும் தரிசிக்கிறோம். அடுத்து நூற்றெட்டீஸ்வரர் எனும் அஷ்டோத்தீச்வரர் மற்றும் அஷ்டோத்திரவல்லியை வணங்குகிறோம். வெளியில் நடராசர் சன்னிதி, பெரிய கொடிமரம் மற்றும் சுப்ரமணியர் வள்ளி தேவசேனா, சிவசூரியன், காலபைரவர் சன்னிதிகள். சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருவாதிரை விழாக்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒருமுறை அகத்திய முனிவர் இத்தலமான சதுர்வேத புரத்துக்கு வந்தபொழுது அசரீரி ஒலித்தது. இங்கு தங்கி ஆரணி ஆற்றில் (அன்றைய பெயர் பிரம்மாரண்ய ஆறு) உள்ள மணலை எடுத்து 108 நாட்களுக்கு தினம் ஒரு லிங்கம் செய்து ஏர் அழிஞ்சல் மரத்தின் கீழ் வைத்து பூஜை செய்வாயாக என்றது அசரீரி. 107 நாட்கள் 107 லிங்கம் செய்து மிகவும் அக்கறையுடன் அகத்தியர் வழிபட்டார். 108வது லிங்கம் செய்து பூஜிக்க வேண்டிய நாளில், 107 லிங்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து சுயம்பு அங்கோல கணபதியாக மாறினார். அகத்தியர் திடுக்கிட்டார்.
முழுமுதற் கடவுளான கணபதியை வணங்காது லிங்க பூஜை ஆரம்பித்தீர்கள், அதனால் தான் என்றது அசரீரி. பிறகு கணபதியை வணங்கி, தனியாக ஒரு சிவலிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவர் தான் நூற்றெட்டீஸ்வரர் என்கிறது தலபுராணம். அங்கோல கணபதியை 108 முறை வலம் வந்தால் காரிய சித்தி மற்றும் திருமண பாக்கியம் கைகூடும். மாசிமாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம். இங்கு வடைமாலை சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.