பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
05:07
பள்ளி, கல்லுõரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் படிப்பில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். எல்லா வீடுகளிலும், பெற்றோர் அருகிலுள்ள மாணவர்களைச் சுட்டிக்காட்டி, அவனைப் பார்த்தாயா! அவன் 1195மார்க், இவன் ஐ.ஏ.எஸ்.இல் பர்ஸ்ட் என்று தங்கள் பிள்ளைகளை மற்றவர்களிடம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மார்க் பெற கடின உழைப்பு தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படித்தவர்களெல்லாம் பண்பாளர்களாக உள்ளார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். படிக்கும் போதே, குழந்தைகளிடம், மாதம் 75 ஆயிரத்துக்கு குறைந்து சம்பாதித்தால், உன்னை சமுதாயம் மதிக்காது. நம் உற்றார் மதிக்கமாட்டார்கள். அதற்கு தகுந்தாற்போல் படி, என்று பிள்ளைகள் மனதில் பணத்தாசையை விதைக்கிறார்கள். பிள்ளைகளும் அதையே உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, சம்பாத்தியம் என்ற ஒரே வார்த்தையை தங்கள் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு விடுகிறார்கள்.மாணவர்களே! நீங்கள் மரத்தைப் பற்றியும், நிலம், நீர், காற்று, விண்வெளி என என்னவெல்லாமோ படிக்கிறீர்கள். ஆராய்ச்சி செய்கிறீர்கள். ஆனால், இந்தப் பொருட்களையும், உங்களையும் படைத்த இறைவனைப் பற்றி என்றாவது படித்ததுண்டா? அவனைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டாமா? அவ்வாறு, இறைவனை அறிந்து கொள்ளாத பட்சத்தில், நீங்கள் பயனற்ற கல்வியையே படிக்கிறீர்கள் என்று முடிவு செய்துவிடலாம்.இறைவனைப் பற்றி படித்தால் தான் மனதில் இறையச்சம் வரும். படிப்புக்குப் பின் லஞ்சம் வாங்கக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது. ஏழைகளிடம் அளவுக்கு மீறிய வைத்தியக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போன்ற தரமான எண்ணங்கள் உங்கள் மனதில் வளரும்.நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்லப்போகிறோம் என்பது பற்றிய ஆய்வு உங்களுக்கு தேவை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இறைவா! எனக்கு பயனுள்ள கல்வியைத் தருவாயாக! என்கிறார்கள். ஆம்..திண்ணமாக, இறைவன் நம்மைப் பயனற்ற கல்வியிலிருந்து பாதுகாப்பானாக! என்ற வேத வாக்கியத்தை நினைவு கூர்வோம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாமல், இறைவனைப் பற்றிய அறிவைப் பெறுவோம், ஒழுக்கமான வாழ்வை வாழ்வோம்.