பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
அரூர்: அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், ஆற்றில் உள்ள பாறைகளுக்கு, பொறி, கடலை உள்ளிட்டவைகளை தூவியும், ஆடு, கோழியை பலியிட்டனர். மேலும், தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் நீராடவும் சமைக்கவும், குடிநீருக்கும் மிகவும் அவதிப்பட்டனர். கழிப்பறை வசதியும் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.மேலும், விழாவுக்கு வந்த பக்தர்களிடம் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் என, சுங்க
கட்டணம் என கூறி வசூல் செய்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல், விழாவுக்கு வந்த வாகனங்களை போலீஸார் போக்குவரத்து பணியில் முறையாக ஈடுபடாமல் இருந்ததால், ஆண்டியூர் - டி.அம்மாப்பேட்டை சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், விழாவுக்கு வந்த பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அரூரில் இருந்து டி.அம்மாப்பேட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.எஸ்.பி., சம்பத் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில், தாசில்தார் தமிழ்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.