பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
ஈரோடு: காவிரி கரையில், ஆடி பெருக்கை பாரம்பரிய முறைப்படி, வழிபாடு நடத்தி பொதுமக்கள் கொண்டாடினர்.தமிழகத்தில், குறிப்பாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆடி பெருக்கை, ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.அதிகாலையில், காவிரி கரைக்கு சென்று குளித்து முடித்த பின், முன்னோர் மற்றும் கன்னிமார் வழிபாடு செய்த பின், காவிரி தாயை வணங்கி, அருகில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர்.பின் உறவினர்கள், நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். அதே போல், புதுமண தம்பதியினர் அதிகளவில் ஆடி பெருக்கு தினத்தன்று, காவிரி கரையில் ஒன்று கூடுவது வழக்கம்.திருமணமான பெண்கள், தாலி பிரித்து கட்டும் நிகழ்ச்சியும், விவசாயத்துக்கு உயிர்நாடியாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக, முளைப்பாரியை ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடக்கும்.கடந்த, 27ம் தேதிக்கு முன் வரை காவிரியில் குடிநீருக்காக
மட்டும், 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆடி பெருக்கை, மக்கள் கொண்டாட, 6,000
கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் நீர் பெருக்கெடுத்தது. அக்ரஹாரம் சமயசங்கிலி, கருங்கல்பாளையம் காவிரி கரை, பரிசல்துறை, நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை முதலே கூடினர்.கோபியை அடுத்த கொடிவேரி, காலிங்கராயன் அணைகட்டு, கவுந்தப்பாடியில் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில், பொதுமக்கள் குவிந்தனர். அங்கு பாரம்பரிய முறைப்படி காவிரியில் குளித்து, கரையோரம் வாழை இலை விரித்து, படையல் போட்டு முன்னோர் வழிபாட்டை நடத்தினர்.புதுமண தம்பதியினர், அதிகளவில் வந்திருந்தனர். தாலி பிரித்து கட்டும் நிகழ்ச்சி, முளைப்பாரியை ஆற்றில் விடும் நிகழ்ச்சிகளும் நடந்தது. கன்னிமார் சுவாமி வழிபாட்டுக்கு, கூழாங்கற்கள் விற்கப்பட்டன.இதையொட்டி, கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்களில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், ரப்பர் படகில், தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.