கடலூர்: பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. கடலூர், பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விநாயகர் கோவிலுக்கு கடந்த 1992ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 24 ஆண்டாகியதைத் தொடர்ந்து அப்பகுதி பக்தர்களின் முயற்சியினால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி கும்பா பிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி வரும் 11ம் தேதி காலை 8:30 மணிக்கு கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. அன்று இரவு 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் இரவு 10:00 மணிக்கு அஷ்டபந் தனம் சாத்தப்படுகிறது. மறுநாள் 12ம் தேதி காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகமும், 10:25 மணிக்கு மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு கற்பக விநாயகர் சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.