பதிவு செய்த நாள்
10
செப்
2014
01:09
ஆர்.கே.பேட்டை : கங்கையம்மனுக்கு, நேற்று இரவு, முச்சந்தியில், கும்பம் படைக்கப்பட்டது. இன்று, காலை, கங்கையில் கரைக்கப்படும். ஆவணி மாதம், நான்காம் செவ்வாய்க்கிழமையில், கங்கையம்மனுக்கு ஜாத்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, எல்லையில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நேற்று இரவு, ஆர்.கே.பேட்டை, பஜார் வீதி முச்சந்தியில், வேப்பிலை குடிலில் கங்கையம்மன் எழுந்தருளினார்.கடந்த மூன்று நாட்களாக, விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், வேப்பிலை ஆடை மற்றும் ஈரச்சேலையுடன் மாவிளக்கு ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு கொழுக்கட்டையுடன், கும்பம் படைத்தனர். பின், அம்மன் குடில் எதிரே, பக்தி நாடகம் நடந்தது. இன்று காலை 7:00 மணியளவில், அம்மன் கங்கையில் கரைக்கப்படுகிறார். இதே போல், பொதட்டூர்பேட்டை யில், இன்று, பகல் 11:00 மணிக்கும், சொரக்காய்பேட்டையில், நாளை, பகல் 12:00 மணிக்கும், அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது.வரும் வெள்ளிக்கிழமை மாலை, பொதட்டூர்பேட்டையில், பக்தர்கள், அம்மன் வேடமணிந்து, ரதங்களில் வலம் வருகின்றனர்.